ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மத்திய ஜாவாவில் உள்ள ‘த ஜியோங்’ சுற்றுலாத்தலத்தில் 10 மீட்டர் உயர கண்ணாடி பாலம் உடைந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் காயமடைந்தனர்.
பக்கத்து வட்டாரத்தைச் சேர்ந்த 11 பேர் சுற்றுலாவாக அந்த வனப் பகுதிக்குச் சென்றபோது புதன்கிழமை அச்சம்பவம் நிகழ்ந்ததாக பான்யுமாஸ் நகர காவல்துறை தெரிவித்தது.
உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தோர் தவிர மற்றவர்கள் பாலத்தின் கைப்பிடியைப் பிடித்தவாறு உயிர்தப்பியதாகவும் அது கூறியது.
புதன்கிழமை காலை 10 மணியளவில் (சிங்கப்பூர் நேரம் முற்பகல் 11 மணி) கண்ணாடி உடையும் சத்தத்தைக் கேட்டதாக அந்தப் பகுதியில் இருந்த சுனார்தோ என்னும் ஊழியர் தெரிவித்தார்.
சுற்றுப் பயணிகள் செல்ஃபி படம் எடுத்துக்கொண்டு இருந்தபோது அந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. சம்பவ இடத்தில் வைக்கப்பட்டு உள்ள கண்காணிப்புப் படக் கருவியில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர் ஒரு பெண் என்று நம்பப்படுகிறது.