இஸ்லாமாபாத்: சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பிணையில் விடுவிக்க இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அரசாங்க ரகசியங்களைக் கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்படாததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தான் தூதர் ரகசியமாக அனுப்பிய கம்பிவடத் தகவலை பிரதமர் என்ற முறையில் அந்த ரகசியத்தைப் பாதுக்காக்காமல் பொதுவெளியில் அம்பலப்படுத்தியதாக கான் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யுமாறும் கானுக்கு பிணை வழங்குமாறும் தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதாக அவரது வழக்கறிஞர் நயீம் பாஞ்சதா தெரிவித்தார்.
பிரதமர் பதவியில் இருந்த கானுக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 2022ஆம் ஆண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அவர் பதவியிலிருந்து விலகினார்.
பின்னர், லஞ்ச ஊழல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

