தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்கா துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் இறந்துகிடந்தார்

2 mins read
6429422d-771c-4a77-9ba5-d127659f6fc0
ராபர்ட் ஆர். கார்ட், 40, என்ற சந்தேக நபர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்துகிடந்தார். - படம்: ஏஎஃப்பி

லெவிஸ்டன் மாய்னி: அமெரிக்காவின் லெவிஸ்டன் மாய்னியில் 18 பேரைச் சுட்டுக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் வெள்ளிக்கிழமை இறந்துகிடந்தார்.

அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாகத் தெரியவருகிறது.

அவரின் உடல் காணப்பட்டதை அடுத்து காவல்துறை அதிகாரிகள் தங்களுடைய 48 மணி நேர தேடுதல் வேட்டையை முடித்துக்கொண்டனர்.

அமெரிக்காவின் மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஒன்று என்று கூறப்படும் அந்தக் கொடூரச் செயல் புதன்கிழமை இரவு நேரத்தில் நிகழ்ந்தது.

சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்தில் அதிகாரிகள் கைவிடப்பட்ட வாகனம் ஒன்றைப் பக்கத்தில் உள்ள லிஸ்பன் ஃபால்ஸ் என்ற நகரில் கண்டனர்.

அந்த வாகனம் காணப்பட்ட இடத்திற்கு அருகே உள்ள காட்டுப் பகுதியில் ராபர்ட் ஆர் கார்ட், 40, என்ற அந்தச் சந்தேக நபரின் உடலை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

“பரபரப்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் மரணமடைந்துவிட்டார்,” என்று மாய்னி நகர ஆளுநர் ஜெனட் மில்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சந்தேக நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு மாண்டு விட்டதாகத் தெரிகிறது என்று மாய்னி நகரின் பொது பாதுகாப்புத்துறை ஆணையர் தெரிவித்தார்.

அந்த நபரைத் தேடிக் கண்டுபிடிக்கும் வேட்டையில் பல்வேறு அமைப்புகளையும் சேர்ந்த நூற்றுக் கணக்கான அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அமெரிக்கா ராணுவத்தின் சேமப்படை வீரரான அந்தச் சந்தேக நபர், மூன்று இடங்களில் கண்டபடி துப்பாக்கியால் சுட்டு பலரையும் கொன்றுவிட்டார். அதில் 13 பேர் காயம் அடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த வன்செயலுக்கான நோக்கம் என்ன என்பது பற்றி எதையும் அவர்கள் குறிப்பிடவில்லை.

குறிப்புச் சொற்கள்