தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்பெயினில் 200,000 குழந்தைகள்பாலியல் துன்புறுத்தலால் பாதிப்பு

1 mins read
6efae647-8a85-448f-9f0a-1f7cbfdc699d
1940களிலிருந்து 200,000 குழந்தைகள் பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

மேட்ரிட்: ஸ்பெயினில் நாட்டையே உலுக்கும் வகையில் 200,000 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

1940ஆம் ஆண்டிலிருந்து ரோமன் கத்தோலிக்க மத குருமார்களால் 200,000 குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகினர் என்று ஸ்பெயினின் தேசிய விசாரணை ஆணையம் மதிப்பிட்டுள்ளது.

எட்டாயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஸ்பெயின் நாட்டு பெரியவர்களின் மக்கள் தொகையில் 0.6 விழுக்காட்டினர் தாங்கள் இளம் வயதில் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக கூறியுள்ளனர்.

பாலியல் கொடுமைப்படுத்திய மற்றவர்களையும் சேர்த்தால் அது 1.13 விழுக்காடுக்கு அதிகரிக்கும். அதாவது 400,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஸ்பெயினின் தேசிய விசாரணை ஆணையம் வெள்ளிக் கிழமை அன்று செய்தியாளர் கூட்டத்தில் 700 பக்க ஆய்வறிக்கையை வெளியிட்டது.

ஆணையம், பாதிக்கப்பட்ட 487 பேரையும் நேர்காணல் செய்தது. அப்போது, பாலியல் கொடுமையால் தங்களுக்கு ஏற்பட்ட மனநலப் பிரச்சினைகளை பெரும்பாலோர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

“தற்கொலை செய்து கொண்டவர்களும் உள்ளனர். இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாதவர்களும் உள்ளனர்,” என்று முன்னாள் கல்வி அமைச்சர் கூறினார்.

மனோவியல் ஆசிரியையான திருவாட்டி தெரசா கொண்டே, 1980களில் தென்மேற்கு நகரமான சலாமாங்காவில் உள்ள சமயப் பள்ளிக்குச் சென்றபோது 14 வயதிலிருந்து பல ஆண்டுகள் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறினார்.

“இனி சாதாரண மனிதராக நான் வாழ முடியாது,” என்றார் அவர்.

“சிகிச்சை எடுத்துக் கொள்வதையோ அல்லது மருந்து உட்கொள்வதையோ ஒருபோதும் நிறுத்த முடியாது,” என்று 57 வயதான ஆசிரியை ஏஎஃப்பியிடம் தெரிவித்தார்.