டாக்கா: பங்ளாதேஷ் நாட்டில் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று கோரி சனிக்கிழமை அன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.
தலைநகர் டாக்காவில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஆதரவாளர்கள் பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலக வேண்டும் என்று முழங்கியவாறு சென்றனர்.
சனிக்கிழமை பேரணியில் முக்கிய எதிர்க்கட்சியான பங்ளாதேஷ் தேசியவாதக் கட்சியும் ஆகப்பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமியும் பங்கேற்றன.
இதுவரை இல்லாத அளவுக்கு பேரணி பெரிய அளவில் நடத்தப்பட்டது.
பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு மூன்று மாதங்களே உள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
ஏறக்குறைய 15 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருக்கும் பிரதமர் ஹசினா, நாட்டை நிறுவியவரின் மகள். அவரது தலைமையில் பொருளியல் வளர்ச்சி அண்டை இந்தியாவைவிட வேகமாக உள்ளது. இருந்தாலும் பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் அவரது அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன.