யங்கூன்: சீனாவுடனான நாட்டின் வடக்கு எல்லைக்கு அருகே போராளிகளுக்கும் மியன்மார் ராணுவத்துக்கும் இடையேயான கடும் சண்டை இரண்டாவது நாளாக நீடித்து வருவதாக ஆயுதக் குழுக்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
மியன்மார் ராணுவம் 2021 பிப்ரவரியில் ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், வடக்கு ஷான் மாநிலத்தின் சக்திவாய்ந்த இனப் போராளிக் குழுக்களுடானான சண்டை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
இனப் போராளிக் குழுக்களின் கூட்டணி வெள்ளிக்கிழமை நாட்டின் வடக்குப் பகுதி முழுவதும் உள்ள ராணுவ நிலைகள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியது.
மியான்மார் தேசிய ஜனநாயகக் கூட்டணி ராணுவம் சனிக்கிழமையன்று மூன்று ராணுவ புறநகர் காவல் நிலையங்களைக் கைப்பற்றியதாகக் கூறியது. அதில் இரண்டு சீனாவின் எல்லைப் பகுதியில் மோங்கோவுக்கு அருகில் அமைந்துள்ளன.
போராளிகள் ஹோபாங்கில் இருந்து வந்த ராணுவக் குழுவை பதுங்கியிருந்து தாக்கி ராணுவ உபகரணங்களை கைப்பற்றினர். தாக்குதலில் உயிரிழந்தவர்கள் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
தாங் தேசிய விடுதலை ராணுவம், நாம்காம் பகுதியில் மூன்று ராணுவ புறநகர்க் காவல் நிலையங்களைக் கைப்பற்றியதாகவும், சண்டையில் 18 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தது.