அரெகுவிப்பா, பெரு: சமார் 500 ஆண்டுகளுக்கும் மேற்பட்டு நரபலி செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உடல் பனியில் இயற்கையாகப் பதப்படுத்தப்பட்டு 1995ல் பெரு நாட்டின் தென்பகுதியான அரெகுவிப்பாவில் அம்பாட்டோ எரிமலை உச்சியில் இன்கா பழங்குடியினர் கால புதைகுழிகளில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டது. இயற்கைப் பேரிடர்களிலிருந்து காப்பாற்றிக்கொள்ள அவள் இன்கா இனத்தவரால் தெய்வங்களைத் திருப்திப்படுத்த நரபலி செய்யப்பட்டிருக்கலாம்.
பெரு மற்றும் போலந்து நாட்டு விஞ்ஞானிகள், டிஜிட்டல் நெருடல் (ஸ்கேன்) முறையில் அப்பெண்ணின் உடலை ஆய்வு செய்து, உயிரோட்டமான மாதிரி உருவத்தை உருவாக்கி, பெருவில் உள்ள சான்டா மாரியா கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் காட்சிக்கு வைத்துள்ளனர். 14 அல்லது 15 வயது நிரம்பிய அப்பெண்ணுக்கு “லேடி ஆஃப் அம்பாட்டோ” அல்லது ஜுவானிதா என்று பெயரிட்டுள்ளனர்.
மேற்கு அமெரிக்காவின் அன்டியன் மலைத்தொடர் மற்றும் பசிபிக் பெருங்கடல் எல்லை வரை உள்ள பரந்த பகுதியை இன்கா பழங்குடியினர் வலிமையாக ஆட்சி செய்துவந்துள்ளனர். ஸ்பெயின் நாட்டு தென் அமெரிக்கப் படையெடுப்புக்குப் பிறகு, 1532ல் இன்கா இனம் அழியத்தொடங்கியது.


