கஸக்ஸ்தான் சுரங்கத் தீ: 25 ஊழியர்கள் பலி

1 mins read
c964c5f4-6298-435f-9356-28f263b4cbdd
ஊழியர்களுடனும் உறவினர்களுடனும் கஸக்ஸ்தான் அதிபர். - படம்: இபிஏ

அல்மட்டி:கோஸ்டியென்கோ எனப்படும் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் மாண்டுவிட்டனர். அச்சுரங்கத்தின் உரிமையாளரான லக்ஸம்பர்க் நாட்டு எஃகு தயாரிப்பு நிறுவனம் (அர்சலர்மிட்டல் டெமிர்டவ் ) இத்துயரச் செய்தியை சனிக்கிழமையன்று (அக்.28) அறிவித்தது. மேலும் 21 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலை கசக்ஸ்தானின் அதிபர் காசிம் ஜொமார்ட் தொகாயேவ் தெரிவித்துக்கொண்டதோடு அக். 29ம் தேதியை தேசிய துக்க நாளாக அறிவித்தார்.

மேலும் சம்பந்தப்பட்ட அர்சலர்மிட்டல் டெமிர்டவ் நிறுவனத்துடனான அரசாங்க முதலீடுகளை உடனே நிறுத்திக்கொள்ள உத்தரவிட்டார்.

கரகண்டா பகுதியில் இயங்கிவந்த கோஸ்டியென்கோ சுரங்கத்தின் உள்ளே விபத்தின்போது 252 பேர் இருந்துள்ளனர். அவர்களில் 206 பேர் காப்பாற்றப்பட்டனர்.

18 பேர் மருத்துவ உதவியை நாடியுள்ளனர். மீத்தேன் வாயு கசிவினால் ஏற்பட்ட வெடிப்பே தீ விபத்துக்குக் காரணம்.

அந்தச் சுரங்கத்தை தேசிய உடைமையாக்க கசக்ஸ்தான் அரசாங்கத்துடன் தாம் பேச்சுவார்த்தை நடத்திவந்ததை லக்ஸம்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊழியர் பாதுகாப்பையும் இயந்திர மேம்பாட்டையும் உறுதி செய்யத் தவறியதால், அடிக்கடி விபத்துகள் நடந்துவருகின்றன என்றும் சுரங்கத்தை ஏற்று நடத்த அரசாங்கம் முதலீட்டாளர்களைத் தேடிவருகிறது எனவும் கசக்ஸ்தானின் முதல் துணைப் பிரதமர் ரோமன் ஸ்கில்யார் கடந்த மாதம் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்