ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மத்திய ஜாவாவில் உள்ள பன்யூமாஸ் என்ற பகுதியில் இருக்கும் லும்பாகுயூஸ் என்ற ஊசி இலைக்காட்டு சுற்றுலா இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த கண்ணாடித் தரைப் பாலம் புதன்கிழமை நொறுங்கி விழுந்ததில் ஒருவர் மாண்டார்.
அந்தச் சம்பவம் பற்றி பன்யூமாஸ் நகர காவல்துறை புலனவிசாரணை நடத்தியது.
அந்தப் பாலத்தின் தரைப்பகுதியில் போடப்பட்டு இருந்த கண்ணாடி வெறும் 1.2 செ.மீ. கணத்துடன் மிகவும் மெல்லியதாக இருந்தது என்பதைக் காவல்துறை கண்டுபிடித்தது.
இது ஒருபுறம் இருக்க, தி ஜியோங் என்ற சுற்றுலா இடத்தில் இருக்கும் அந்தப் பாலத்தை நிர்வகிக்கும் முறையிலும் அலட்சியப் போக்கு காணப்பட்டது என்று காவல்துறையின் உளவுப்பிரிவின் தலைவர் ஆணையர் ஆகுஸ் சுப்பிரியாடி கூறினார்.
கட்டுமானத்தில் அனுபவம் இல்லாத ஊழியர்கள் பாலத்தைப் பரிசோதித்து இருக்கிறார்கள்.
பாலத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு வலையும் இல்லை. எச்சரிக்கை பலகையோ பாதுகாப்பு தகவல்களோ எதுவும் இல்லை என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.