தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸாவுக்குள் முன்னேறும் இஸ்ரேலியப் படை

2 mins read
e8f90277-9fd0-4fb4-9519-c79ef97b1a51
காஸா வட்டாரத்துக்குள் இஸ்ரேலிய பீரங்கிகள். - படம்: ராய்ட்டர்ஸ்

காஸா: இஸ்ரேலின் ராணுவப் படை காஸாவில் திட்டமிட்டபடி படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று இஸ்ரேலின் ராணுவப் பேச்சாளர் டேனியல் ஹேகாரி தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், தமது படை 12க்கும் மேற்பட்ட போராளிகளைக் கொன்றுள்ளதாகச் சொன்னார்.

ஆனால் தரைப்படை இருக்கும் இடத்தை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

முன்னதாக ஹமாஸ் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள காஸா வட்டாரத்துக்குள் இஸ்ரேலியப் பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள படத்தை இஸ்ரேலிய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

தரைவழித் தாக்குதலுக்கு உத்தரவு பிறப்பித்த 48 மணி நேரத்தில் இஸ்ரேலிய பீரங்கிகள் காஸா வட்டாரத்துக்குள் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான மூன்று வார போரில் இரண்டாவது கட்டத்தில் நுழைந்துள்ளோம் என்று இஸ்ரேல் தன்னிச்சையாக அறிவித்தது.

இதையடுத்து தொலைத் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ள காஸாவை நோக்கி இரவு நேரத்தில் இஸ்ரேல் பீரங்கிகள் நகர்ந்து சென்றன.

ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி, இணையத் தொடர்பு ஓரளவு மீண்டது என்று ஞாயிற்றுக் கிழமை காஸா குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

இஸ்ரேல் தொடர்ந்து குண்டுகளை வீசி தாக்கி வருகிறது. இஸ்ரேலிய ராணுவ பீரங்கிகள், காஸாவுக்குள் நுழைந்தது, இஸ்ரேலிய வீரர்கள் தங்களுடைய நாட்டின் கொடியை காட்டுவது போன்ற படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்தப் படங்களின் நம்பகத்தன்மையை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை.

இஸ்ரேலியப் படைகளை தொடர்ந்து தாக்கி வருவதாக ஹமாஸும் கூறியுள்ளது.

இஸ்ரேலிய வீரர்கள் மீது குண்டுகளை வீசி, பீரங்கிகள் மீது ஏவுகணைகளை பாய்ச்சி வருகிறோம் என்று ஹமாஸ் குறிப்பிட்டது.

“இஸ்ரேல் எங்களை உலகத் தொடர்புகளிலிருந்து துண்டித்துவிட்டது. வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தம் எங்களுக்கு கேட்கிறது. அதே சமயத்தில் எதிரி படைகள் எங்களை நெருங்காமல் நின்றுவிட்டது பெருமையாக உள்ளது,” என்று காஸா நகரத்தில் தங்கியுள்ள பொதுச் சேவை ஊழியரான ஷாபான் அகமட் தெரிவித்தார்.

இஸ்ரேலின் ஆகாயத் தாக்குதலில் தனது ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் இரண்டு நாள்களுக்கு முன்பு இறந்துவிட்டது ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் தெரிய வந்ததாகவும் அவர் கூறினார்.

இஸ்ரேலின் தற்காப்புப் படை வீரர்கள் 450 ஹமாஸ் இலக்குகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்