‘போரை நிறுத்துவது ஹமாஸிடம் சரணடைவதற்குச் சமம்’

2 mins read
62b2b22f-7a73-4197-92a1-e2cb0f44fc7e
இஸ்ரேல், காஸா வட்டாரத்தின்மீது நடத்திய தாக்குதலால் நெருப்பும் புகையும் எழும்புகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

ஜெருசலம்: ஹமாஸுக்கு எதிரான போரை நிறுத்துவது அந்த அமைப்பிடம் சரணடைவதற்குச் சமம் என்று கூறியுள்ள இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, இனி அது நடக்க வாய்ப்பில்லை என திங்கட்கிழமை தெரிவித்தார்.

காஸா வட்டாரத்துக்குள் நுழைந்து இஸ்ரேலியப் படைகள் போரிட்டு வருகின்றன. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள அந்த வட்டாரத்தை முற்றுகையிட்டு இஸ்ரேல் குண்டுகளை சரமாரியாக வீசி வருகிறது.

இஸ்ரேலிய வரலாற்றில் இதுவரை இல்லாத தாக்குதலை அது நடத்தி வருகிறது.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் போராளிகள் 5,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் மீது பாய்ச்சியதில் பல நூறு இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.

இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் விடாமல் தாக்கி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான காஸா மக்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலின் தீவிர தாக்குதலால் காஸா வட்டாரத்தில் வாழும் 2.4 மில்லியன் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு 8,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்று ஹமாஸ் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

வெளிநாட்டு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பிரதமர் நெட்டன்யாகு, ஹமாஸ் போராளிகள் ஏறக்குறைய 1,400 பேரை கொன்றுவிட்டு 230க்கும் மேற்பட்டோரை பிணைப்பிடித்து சென்றுள்ளனர். இந்த நிலையில் போரை நிறுவத்துவது அவர்களிடம் சரண் அடைவதற்குச் சமம் என்றார்.

“போரை நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுப்பது, பயங்கரவாதிகளிடம் சரண் அடைவது போன்றதாகும். அது நடக்காது,” என்று அவர் கூறினார்.

இதில் வெற்றி பெறும் வரை இஸ்ரேல் ஓயாது என்றார் அவர்.

இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவும் போர் நிறுத்தத்திற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

“தற்போது போரை நிறுத்துவது சரியான விடையல்ல என்று நம்புகிறோம்,” என்று அமெரிக்க தேசியப் பாதுகாப்பு மன்ற பேச்சாளர் ஜான் கிர்பியும் கூறியுள்ளார்.

இதற்கிடையே இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகுவை மிரட்டுவதற்காக ஹமாஸ் மூன்று பிணையாளிகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாக த இஸ்ரேலிய டைம்ஸ் என்ற இணையத் தளம் தெரிவித்துள்ளது. மூவரின் அடையாளங்கள் தெரியவில்லை.

ஹமாஸ் அல்லது இஸ்ரேல் இதனை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

மூன்று பிணையாளிகளின் புகைப்படத்தை ஹமாஸ் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மூன்று பிணையாளிகளின் புகைப்படத்தை ஹமாஸ் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. - படம்: த இஸ்ரேல் டைம்ஸ் (இணையம்)