தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அன்வார்: இஸ்ரேல்-பாலஸ்தீன பூசலில் மலேசியாவுக்கு அமெரிக்கா நெருக்குதல்

1 mins read
c7facf37-35e2-4978-a68d-cf24175c4694
பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அக்டோபர் 24ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் அன்வார். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: இஸ்ரேல்-பாலஸ்தீன பூசலில் மலேசியா அதன் நிலைப்பாட்டை வெளிப்படுத்த அமெரிக்கா அதற்கு நெருக்குதல் அளிக்க முற்பட்டதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கேள்வி-பதில் அங்கத்தில் பேசிய திரு அன்வார், “அமெரிக்காவுக்கான மலேசியத் தூதரை அழைத்த அமெரிக்க அதிகாரிகள், பூசல் குறித்து எங்கள் நிலைப்பாட்டை அறிய முற்பட்டனர். எங்கள் நிலைப்பாட்டை எங்களின் தூதர் உறுதிப்படக் குறிப்பிட்டார்,” என்றார்.

ஹமாஸ் அமைப்பின் செயல்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவிக்க மலேசியா மறுத்ததால், காஸா பூசல் குறித்து அமெரிக்கா அறிய முற்பட்டதாக திரு அன்வார் விளக்கமளித்தார்.

மலேசியாவின் தன்னிச்சையான நிலைப்பாட்டை மறுஉறுதிப்படுத்திய அவர், மனிதாபிமான உதவிகள் குறித்து மலேசியா உறுதியாக இருக்கும் என்றும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு மலேசியா கண்டனம் தெரிவிக்கும் என்றும் சொன்னார்.

உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்புக்குத் தெரிவிக்கப்பட்ட கண்டனம், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு வெளிப்படுத்தப்படவில்லை என்றும் திரு அன்வார் கூறினார். பல்லாண்டு காலமாக இடம்பெறும் இஸ்ரேல்-பாலஸ்தீன பூசலுக்கு குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகள் கண்டனம் தெரிவிக்காததை அவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்