பெய்ஜிங்: உலகின் தென் துருவத்தில் சீனா பல ஆய்வு நிலையங்களைக் கட்டி இருக்கிறது. இப்போது ஐந்தாவது நிலையத்தை சீனா கட்டி வருகிறது.
அதற்கு உதவியாக இரண்டு ஆய்வுக் கப்பல்களும் ஒரு சரக்குக் கப்பலும் 460 பேருக்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு புதன்கிழமை புறப்பட்டன.
சீனாவின் ஆய்வுக் கப்பல்களிலேயே ஆகப்பெரிய கப்பல் தென் துருவத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.
தென் துருவத்தில் ரோஸ் கடல் என்ற ஆழமான தென் பெருங்கடல் பகுதிக்கு அருகே உள்ள ஒரு தீவில் இருக்கும் பாறையில் அந்த நிலையம் கட்டப்படுகிறது.
அந்தக் கப்பல் அதில் ஒருமித்த கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பசிபிக்கில் அந்தச் சீன நிலையத்தைக் கட்டும் பணிகள் 2018ல் தொடங்கின. அந்தப் பகுதியின் சுற்றுப்புறம் தொடர்பில் ஆய்வுகளை நடத்த அந்த நிலையம் பயன்படுகிறது என்று சீனாவின் அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்தது.
சீனா, தென் துருவத்தில் 1985 முதல் 2014 வரை நான்கு ஆய்வு நிலையங்களைக் கட்டி வைத்துள்ளது. இப்போது கட்டப்படும் ஐந்தாவது நிலையம் அடுத்த ஆண்டு கட்டி முடிக்கப்படும் என்று அமெரிக்காவில் செயல்படும் அறிவுஜீவி அமைப்பு ஒன்று கணித்துள்ளது.