சிப்பாங்: மைஏர்லைன் விமான நிறுவன ஊழியர்கள் தங்களது சம்பள பாக்கிகள் தொடர்பாக புதன்கிழமை காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அந்த நிறுவனத்தின் 20 ஊழியர்கள் மலேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் (எம்டியுசி) தலைமைச் செயலாளர் கமாருல் பஹாருடின் மன்சோரிடம் அப்புகாரைப் பதிவு செய்தனர்.
நிதி நெருக்கடி காரணமாக கடந்த மாதம் 12ஆம் தேதியுடன் அந்த விமான நிறுவனம் தனது சேவையை நிறுத்திக்கொண்டது. இதனால், கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் அந்நிறுவனத்தில் வேலை செய்து வரும் 500 தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
அது கடந்த மே மாதம் முதல் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததோடு ஊழியர் சேமநிதி, சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவன சந்தாவையும் செலுத்தாதது தொடர்பில் இந்தப் புகார் செய்யப்பட்டதாகக் கமாருல் பஹாருடின் தெரிவித்தார்.
இதற்கிடையே, அந்த நிறுவனம் தனது நிதி சிக்கல்களைத் தீர்க்க 15 முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் இரு முதலீட்டாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் அடுத்த கட்டத்தை எட்டியிருப்பதாகவும் அந்நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.