தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எகிப்து-காஸா எல்லை திறப்பு; காயமடைந்தோர், வெளிநாட்டினர் வெளியேற அனுமதி

2 mins read
5cfcf151-8c13-47ff-8089-f2893bbca368
தெற்கு காஸா பகுதியில் உள்ள ராஃபா எல்லையைக் கடந்து எகிப்துக்குள் சென்ற மக்கள். - படம்: ஏஎஃப்பி 

மத்திய கிழக்கில் எகிப்துக்கும் காஸாவுக்கும் இடையிலான ராஃபா எல்லைப் பகுதி அக்டோபர் 7ஆம் தேதிக்குப் பிறகு முதல் முறையாக புதன்கிழமை திறக்கப்பட்டது.

அதன் வழியாக 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் இஸ்ரேல் தாக்குதலால் காயமடைந்த பாலஸ்தீனர்களும் காஸாவைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதாக காஸா எல்லை, எல்லைக் கடப்பு ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்ததாக அல் ஜசீரா ஊடகம் குறிப்பிட்டது.

முன்னதாக எல்லையைக் கடந்து எகிப்துக்குள் அனுமதிக்கப்படக்கூடிய மக்களின் பெயர் பட்டியலை அந்த ஆணையம் வெளியிட்டது.

எகிப்து, இஸ்ரேல், ஹமாஸ் ஆகிய மூன்று தரப்புகளுக்கும் இடையில் கத்தார் நாட்டின் உதவியுடன் ஏற்பட்ட இணக்கத்தை அடுத்து அந்த எல்லை திறக்கப்பட்டது.

காயமடைந்த பாலஸ்தீனர்களின் முதல் குழுவினர் மருத்துவ வாகனங்கள் மூலம் எகிப்துக்குள் நுழைந்ததாக எகிப்திய ஊடகம் தெரிவித்தது.

இஸ்ரேல் தாக்குதலால் காயமடைந்த 81 பேர் சிகிச்சைக்காக புதன்கிழமை எகிப்துக்குள் சென்றதாக பாலஸ்தீன எல்லை ஆணைய தகவல் வட்டாரம் ஒன்றும் எகிப்திய பாதுகாப்பு தகவல் வட்டாரங்களும் புதன்கிழமை கூறின.

அவர்கள் ஒருபுறம் இருக்க, வெளிநாட்டு கடப்பிதழ்களைக் கொண்டுள்ள 500 பேரும் எல்லை வழியாக எகிப்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட இருந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.

இருந்தாலும் அனைவரும் வெளியேறிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்றும் ஒரு தகவல் வட்டாரம் கூறியது.

இதனிடையே, ராஃபா எல்லையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கும் எகிப்தின் சினாய் பகுதியில் ஒரு திடலில் கொட்டகைகள் போட்டு தற்காலிக மருத்துவமனைகள் தயாராக இருந்ததாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

எல்லை வழியாக கடந்து காஸாவுக்குள் சென்று காயமடைந்தவர்களை ஏற்றி வர 40 மருத்துவ வாகனங்கள் தயாராக இருந்ததாகவும் உதவிப்பொருள்களை ஏற்றிக்கொண்டு 70 வாகனங்கள் காஸாவுக்குள் செல்ல எல்லை அருகே காத்து இருந்ததாகவும் தகவல்கள் கூறின.

குறிப்புச் சொற்கள்