கோலாலம்பூர்: மலேசியாவில் ஆடம்பரப் பொருள்களுக்கான வரி 2024 மே 1ஆம் தேதி நடப்புக்கு வரும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
உயர் மதிப்புப் பொருள்களுக்கு வரி விதிப்பதன் தொடர்பிலான கொள்கைகளையும் சட்ட அம்சங்களையும் முடிவு செய்வதில் நிதி அமைச்சு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக நவம்பர் 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் எழுத்து மூலமாக அளித்த பதிலில் பிரதமர் கூறினார்.
“நிதி அமைச்சும் சுங்கத்துறையும் பல்வேறு தரப்புகளையும் எட்டி பல்வேறு கருத்துகளையும் யோசனைகளையும் திரட்டி இருக்கிறது.
“அவற்றை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு கொள்கைகளும் சட்டமும் உருவாக்கப்பட்டு வருகின்றன,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
மலேசிய அரசாங்கம் ஆடம்பரப் பொருள்களுக்கு 5% முதல்10% வரை வரியை விதிக்கும் என்று அக்டோபர் 13ஆம் தேதி வரவுசெலவுத் திட்டம் 2024ஐத் தாக்கல் செய்து பேசியபோது நிதி அமைச்சருமான பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

