தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸாகிருக்கு ஒரு மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க ராமசாமிக்கு உத்தரவு

1 mins read
343ff0cc-31b6-4a88-b187-8f3f3c0120b3
பினாங்கு முன்னாள் துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி, சமய போதகர் ஸாகிர் நாயக்குக்கு ஒரு மில்லியன் ரிங்கிட் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என மலேசிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: சமய போதகர் ஸாகிர் நாயக்கை அவதூறாகப் பேசியதன் தொடர்பில் அவருக்கு ஒரு மில்லியன் ரிங்கிட் (S$287,500) இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமிக்கு மலேசிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸாகிர் தொடர்பில் இரண்டு வழக்குகளை நீதிபதி அனுமதிப்பதாகக் கூறியதை அடுத்து உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் பிரதிவாதியான ராமசாமி, ஸாகிருக்கு வியாழக்கிழமை தொடங்கி 30 நாள்களுக்குள் விதிக்கப்பட்ட தொகையைச் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இரண்டு வழக்குகளும் 2019ஆம் ஆண்டின் அக்டோபர், டிசம்பர் மாதங்களில் தொடுக்கப்பட்டவை.

ராமசாமி நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில் உரை ஆற்றுவதற்காக நைஜீரியா சென்றுள்ள ஸாகிர், அங்கிருந்தவாறு நீதிமன்ற விசாரணையில் கலந்துகொண்டார்.

“அதிகப்படியான எச்சரிக்கையுடன் ராமசாமியின் தற்காப்புரீதியான ஆதாரங்களை நான் கருதுகிறேன். என் முடிவிலிருந்து மாறும் வகையில் அவரது வாதங்கள் இல்லை. அதனால், ராமசாமி தொடர்பான ஆதாரங்கள், அவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்வதற்கு ஏற்றதல்ல என நான் கருதுகிறேன்,” என்றார் நீதிபதி ஹயாத்துல் அக்மல்.

“பொதுமக்கள் பார்வையில் டாக்டர் ஸாகிரை இழிவுபடுத்தி, கேலிசெய்யும் வகையில் தனிப்பட்ட தாக்குதல்களாக அந்தக் குற்றச்சாட்டுகள் உள்ளன,” என்றார் அவர்.

வழக்கு விசாரணைக்குப் பின் ஸாகிரிடம் ராமசாமி பொது மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்