தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாட்ஸ்அப் குழுவிலிருந்து விலக்கியதால் நண்பரைக் கொன்றதாக ஆடவர் கைது

1 mins read
ad8aa748-6ce2-48a4-a235-fd6ee8272a94
இந்தோனீசியாவில் நிகழ்ந்த சம்பவம். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் வாட்ஸ்அப் குழுவிலிருந்து தன்னை விலக்கிய நண்பரை ஆடவர் ஒருவர் கொலை செய்ததாக நம்பப்படுகிறது.

மாண்ட ஏட்ரியன் என்பவரின் உடல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டது. அவரின் உடலில் மூன்று கத்திக் குத்துக் காயங்கள் காணப்பட்டன. கத்தி நெஞ்சில் புகுந்து இதயத்தைத் துளைத்த காயம் அவற்றில் ஒன்று என மேற்கு ஜாவா தலைநகர் பாண்டுங்கின் காவல்துறை தெரிவித்தது.

சம்பவ இடத்தில் காணப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு காவல்துறையினர் 36 வயது டோட்டோ டொயிபான் எனும் சந்தேக நபரை வேறு பகுதியில் கைது செய்தனர்.

இருவரும் XTC Beer 188 எனும் வாட்ஸ்அப் குழுவின் உறுப்பினர்களாக இருந்தனர். அக்குழுவில் பொதுவாக மோட்டார்சைக்கிள்களைப் பற்றிப் பேசப்படும் என்று திரிபுன் ஜபார் செய்தி இணையத்தளம் தெரிவித்தது.

குழுவில் டொயிபான் அனுப்பிய குறுந்தகவலை 29 வயது ஏட்ரியன் மிரட்டலாகப் பார்த்தார் என்று பாண்டுங் நகர காவல்துறைத் தலைவர் குஸ்வோரோ விபோவோ திங்கட்கிழமையன்று கூறினார். அதையடுத்து சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் குழுவின் நிர்வாகியான ஏட்ரியன், தொயிபானை குழுவிலிருந்து விலக்கினார்.

அச்செயலைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாததையும் அது தனது மனதைப் புண்படுத்தியதாகவும் தொயிபான் ஒப்புக்கொண்டதாக திரு குஸ்வோரோ சொன்னார். அதனைத் தொடர்ந்து ஏட்ரியனுடன் சண்டை ஏற்பட்டதாகவும் தான் வைத்திருந்த கூரான ஆயுதத்தால் தொயிபான் அவரைத் தாக்கியதாகவும் காவல்துறையினர் கூறினர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் தொயிபானுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்