தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

படுத்த படுக்கையாகக் கிடந்த மனைவியைக் கொன்ற கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை

2 mins read
26f82a1e-b5bf-4229-8d78-241d62670f4c
மனைவி நீண்டநாளாக துன்பப்படுவதைப் பார்த்து விரக்தியடைந்ததாக 60 வயதான கணவர் கூறியுள்ளார். - கோப்புப் படம்: பிக்சல்ஸ்

சோல்: தென்கொரியாவில் நோய்வாய்ப்பட்டிருந்த மனைவியைக் கொன்றதற்காக 60 வயதான கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2022 ஏப்ரல் மாதம் படுத்தபடுக்கையாகக் கிடந்த மனைவியைக் கொன்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது என்று சோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் தெரிவித்தது.

2017ஆம் ஆண்டில் அவரது மனைவிக்கு புற்றுநோய் முற்றியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் மறதிநோய், நரம்புத்தளர்ச்சி, வலிப்புநோய் ஆகியவற்றால் அவரது மனைவி பாதிக்கப்பட்டிருந்தார்.

மனைவியின் உடல்நிலை மோசமடைந்ததால் கணவர், தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார்.

ஆனால் அதையும் அவரால் செய்ய முடியாததால் மனைவியைக் கொல்ல அவர் முடிவு செய்தார்.

கணினியில் உயிலைப் பதிவு செய்து கைப்பேசியை மேசை மீது வைத்துவிட்டு குற்றச் செயலை அவர் புரிந்துள்ளார்.

நீதிமன்றத்தில் கொலைக் குற்றத்தை ஒப்புக் கொண்ட அந்த ஆடவர், மனைவி துன்புறுவதைப் பார்க்க முடியாமல் விரக்தியில் பயங்கர முடிவை எடுத்துவிட்டதாகக் கூறினார்.

தென்கொரிய குற்றவியல் சட்டத்தின்படி கொலைக் குற்றத்திற்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

ஆனால் ஐந்து ஆண்டுகாலமாக மனைவியை அவர் பராமரித்து வந்ததையும் மனைவிக்கும் அவருக்கும் இருந்த நல்லுறவையும் அவர் மீது குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்பதையும் கருத்தில் கொண்டு அந்த நபரின் தண்டனைக் காலம் நான்கு ஆண்டுகளுக்கு குறைக்கப்பட்டது.

இதே போன்று, நோய்வாய்ப்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்களே கொன்ற சம்பவம் தென்கொரியாவில் பல நடந்துள்ளன.

2021ஆம் ஆண்டில் மூளை பாதிக்கப்பட்டு பல மாதங்களாக படுத்த படுக்கையாகக் கிடந்த தந்தையைக் கொன்றதற்காக 22 வயது இளையர் கைது செய்யப்பட்டார்.

தன் தந்தைக்கு வாழ விருப்பமில்லை என்று தாமே முடிவு செய்த அந்த இளையர், தந்தைக்கு வழங்கப்பட்டிருந்த உணவு விநியோகம் உள்ளிட்ட உயிர்க்காப்பு கருவிகளை நிறுத்தி, இறக்கச் செய்துவிட்டார்.

அந்த இளையருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தை சுட்டிக்காட்டி படுத்த படுக்கையாகக் கிடக்கும் நோயாளிகளைப் பராமரிக்கும் இளையர்களின் பிரச்சினைகளை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருந்தன.

இதையடுத்து 2022ஆம் ஆண்டில் உடல் அல்லது மனரீதியாக பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை பராமரிக்கும் 14 முதல் 34 வரையிலான இளையர்களுக்கு நிதி ஆதரவு அளிக்க சோல் நகர மன்றம் முடிவு செய்தது.

குறிப்புச் சொற்கள்