தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸாவில் மருத்துவ வாகனம்மீது தாக்குதல்; 15 பேர் உயிரிழப்பு

2 mins read
c5875fa4-3258-401f-b7ac-dca459785a8b
காஸாவின் ஆகப் பெரிய அல் ஷஹிஃபா மருத்துவமனை அருகே சென்றுகொண்டிருந்த மருத்துவ வாகனத்தின்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. - படம் ஏஎஃப்பி

காஸா/டெல்அவிவ்/பெய்ரூட்: காஸாவில் மருத்துவமனை அருகே சென்றுகொண்டிருந்த மருத்துவ வாகனத்தின்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியாகினர்; 60 பேர் காயமடைந்தனர்.

காஸா சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரவ் அல்கிட்ரா இதனைத் தெரிவித்தார்.

காஸாவின் ஆகப் பெரிய அல் ஷஹிஃபா மருத்துவமனை அருகே சென்றுகொண்டிருந்த பல மருத்துவ வாகனங்களில் ஒன்றின்மீது இத்தாக்குதல் நடந்தது.

போர் நடக்கும் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மருத்துவ வாகனத்தைப் பயன்படுத்தியதைத் தனது படையினர் அடையாளம் கண்டு தாக்கியதில் போராளிகள் மாண்டுவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்தது.

ஹமாஸ் அதிகாரி இசாட் எல் ரெஷிக், தம் போராளிகள் மருத்துவ வாகனத்தில் இருந்தனர் என்பதை ஆதாரமற்றது என்று நிராகரித்தார்.

மற்றொரு சம்பவத்தில், வெள்ளிக்கிழமை காஸா நகரில் உள்ள ஒரு பள்ளியில் தஞ்சம் புகுந்த நூற்றுக்கணக்கானோர்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர் பலர் கொல்லப்பட்டனர் என்று காஸா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாண்டவர் எண்ணிக்கையை அவர்கள் அறிவிக்கவில்லை. இஸ்ரேலிய ராணுவமும் சம்பவத்தை உறுதிசெய்யவில்லை.

அமெரிக்க மூத்த அரசதந்திரியின் உடனடி போர் நிறுத்த அறைகூவலை நிராகரித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, பிணைக்கைதிகள் விடுவிக்கப்படாதவரை அதற்குச் சாத்தியம் இல்லை என்றும் சொன்னார்.

வட்டாரமே போரில் மூழ்கும் சாத்தியத்தை இஸ்ரேலும் அமெரிக்காவும் உணரவேண்டும் என்று ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல், லெபனான் எல்லையில் நடக்கும் போர் மேலும் தீவிரமடைந்து, அமெரிக்கப் போர்க் கப்பல்களை எதிர்கொள்ள ஹிஸ்புல்லா தயாராகி வருகிறது எனவும் அவர் கூறினார்.

பாலஸ்தீனத்தை ஆட்சி செய்யும் ஹமாஸ் அமைப்பை துடைத்தொழிக்க இஸ்ரேல் உறுதிபூண்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7 அன்று, தெற்கு இஸ்ரேலுக்குள் புகுந்து 1,400 பேரைக் கொன்றதுடன், 240 பேரைப் பிணைக்கைதிகளாகக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

வான்வழியாகவும் தரைப்படைகளுடன் காஸாவை முற்றுகையிட்டும் இஸ்ரேல் தாக்கி வருகிறது. இத்தாக்குதல்கள் உலகளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மனிதாபிமான உதவிகள் அங்கு அனுப்பப்பட்டு வருகின்றன. உணவுத் தட்டுப்பாடு, மருத்துவ வசதிகள் யாவும் தடைபட்டுள்ளன. ஏறத்தாழ 9,250 பாலஸ்தீனர்கள் மாண்டுவிட்டதாக காஸாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, இஸ்ரேலிய ராணுவ அதிகாரி ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி, அக்டோபர் 7ஆம் தேதி நடந்த தாக்குதலுக்குத் திட்டமிட்ட 10 ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு வாரத்துக்குமுன் தொடங்கப்பட்ட தரைப்படைத் தாக்குதலில் 25 இஸ்ரேலிய வீரர்கள் இறந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்