தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உக்ரேன்: ஒடெசா மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஐவர் காயம்

1 mins read
c58fb206-7c0e-4254-a5ad-8c1d8144ec04
உக்ரேனின் ஒடெசா பகுதியில் ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதம். - படம்: ராய்ட்டர்ஸ்

ஒடெசா (உக்ரேன்): உக்ரேனின் மூன்றாவது பெரிய நகரமான ஒடெசாவில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ரஷ்யா நடத்திய ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களால் குறைந்தது ஐவர் காயமடைந்துள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்களில் தானியம் தாங்கிய சரக்கு வாகனங்களும் நகரத்தின் மைய ஓவியக் காட்சியகம் ஒன்றும் பல உயர்மாடி குடியிருப்புக் கட்டடங்களும் சேதமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சேதமடைந்ததாகக் கூறப்படும் ‘தேசிய ஒடெசா ஓவிய அரும்பொருளகம்’ திறக்கப்பட்டு 124 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் ரஷ்யா இவ்வாறு ‘வாழ்த்து தெரிவிக்கும் வகையில்’ தாக்கியுள்ளதாக ஒடெசா பகுதி ஆளுநர் திரு ஒலெ கிப்பர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய திரு கிப்பர், ரஷ்யா ஏவிய 15 ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதற்கிடையே, சபோரிஜியா பகுதி முன்களத்தில் நடப்பதைப் பற்றி ரஷ்யா ஒருவிதமாகவும் உக்ரேன் வேறுவிதமாகவும் கூறியுள்ளன. சபோரிஜியா உக்ரேனில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.

கியவ்வின் எதிர்தாக்குதலைத் தடுத்துவிட்டதாக ரஷ்யா கூறுவதற்கு இடையே, தான் தாக்குதலைத் தொடர்வதாக உக்ரேனிய ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இருதரப்பும் இவ்வாறு போர் தொடர்பான தகவல் பரவலைக் கட்டுப்படுத்தியவாறு வெற்றி கிட்டியதாகக் கூறி வர, எந்தத் தரப்பு முன்னேறியுள்ளது என்றும் சண்டையின் கடுமை என்ன என்றும் அறுதியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்