இயல்பாக நடமாட சவால்களை எதிர்கொள்வோர்க்கு ஏதுவான வகையிலும் முன்னுரிமை தேவைப்படும் பயணிகளுக்கு இருக்கைகளுடன் தனிப்பட்ட வரிசை போன்ற வசதிகளுடனும் புதிய ஜூரோங் பேருந்து முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வென்ச்சர் டிரைவில் உள்ள பேருந்து முனையம், ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
நடையர் மேம்பாலம், கூரையுடன் நடைபாதை ஆகியவை இணைப்பின் அங்கமாகும். நடையர்கள், பேருந்துப் பயணிகள், ரயில் பயணிகள் என மூவகைப் பயனாளர்களை இணைக்கும் நடைபாதைகள் அனைத்தும் கூரைகளுடன் அமைந்திருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது.
வென்ச்சர் டிரைவ் சாலை நீட்டிக்கப்பட்டு, ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 11, ஜூரோங் கேட்வே சாலை ஆகியவற்றுடன் இணைக்கப்படும். இந்த விரிவாக்கம் நவம்பர் மாதத் தொடக்கத்தில் பொதுப் பயன்பாட்டுக்குத் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டவர் டிரான்சிட் நிறுவனத்தால் புதிய பேருந்து முனையம் நிர்வகிக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
தடையற்ற நுழைவாயில்கள், பேருந்து ஏறும் பகுதிகளில் இருக்கைகள், சக்கர நாற்காலி பயன்படுத்துவோர்க்கு கழிவறைகள், உடை மாற்றும் அறைகள் என பல வசதிகள் முனையத்தில் உள்ளன.
பெற்றோர்கள் குழந்தைகளைப் பராமரிக்க தனியறைகள், அமைதி தேவைப்படும் பயணிகளுக்கான இடங்கள் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.
புதுமுனையத்திலிருந்து செயல்படப்போகும் பேருந்து எண் 870, தெங்கா புது நகரை ஜூரோங் ஈஸ்ட் நகர மைய வசதிகளுடன் இணைக்கும் சேவையாக அறிமுகம் காணவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தற்போது செயல்படும் எண் 78, எண் 160 ஆகிய இரு பேருந்துச் சேவைகளும் புதிய முனையத்திலிருந்து இயங்கும்.
பேருந்துச் சேவைகளில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் அனைத்தும் நவம்பர் 26 முதல் தொடங்கும்.