எறும்புதின்னிகளைக் கடத்த முயன்ற இந்திய ஆடவர் கைது

எறும்புதின்னிகளைக் கடத்த முயன்ற இந்திய ஆடவர் கைது

படம்: அரச மலேசிய சுங்கத் துறை, மத்திய வட்டாரம்

06 Nov 2023 - 8:14 pm

1 mins read

புத்ரா ஜெயா: மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு எறும்புதின்னிகளைக் கடத்த முயன்ற, இந்திய நாட்டு ஆடவர் அக்டோபர் 28ஆம் தேதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பயணப் பெட்டியில் சோதனை மேற்கொண்டபோது, அதில் மூன்று எறும்புதின்னிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அரச மலேசிய சுங்கத் துறையின், மத்திய வட்டாரத்துக்கான நடவடிக்கைப் பிரிவு இயக்குநர் வோங் பூன் சியான் தெரிவித்தார்.

ஆடவரின் பயணப் பெட்டியில் சந்தேகத்துக்குரிய பொருள்கள் இருந்ததால் விமான நிலைய பாதுகாப்புக் காவல்துறை அதிகாரிகள், அரச மலேசிய சுங்கத் துறைக்கும், வனவிலங்கு பாதுகாப்புப் பிரிவினருக்கும் தகவல் வழங்கியதாக அவர் கூறினார்.

பின்னர், அந்த பயணப் பையை தமது தரப்பு திறந்து சோதனையிட்ட போது, அதில் மூன்று அழுங்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக பூன் சொன்னார்.

இந்தியாவில் செயல்படும் முகவர்கள், எறும்புதின்னிகளை மலேசியா வாயிலாக கொழும்புக்குக் கடத்த, சம்பந்தப்பட்ட ஆடவரை இடைத்தரகராக பயன்படுத்தி இருக்கலாம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டது.

உலகின் அதிகளவில் கடத்தப்படும் பாலூட்டிகளான எறும்புதின்னிகள் அவற்றின் செதில்களுக்காக வேட்டையாடப்படுகின்றன. இது பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் அதன் இறைச்சி சில ஆசிய நாடுகளில் சுவை மிக்க உணவாக கருதப்படுகிறது. அதிக தேவை, லாபகரமான வருமானத்தால் சட்டவிரோத வனவிலங்கு வணிகம் பல பில்லியன் டாலர் தொழிலாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகடத்தல்விலங்கு