ஹூஸ்டன்: மனைவியை 17 முறை கத்தியால் குத்தி, பின்னர் அவரது உடல் மீது வாகனத்தை ஓட்டி கொடூரமாகக் கொலை செய்ததற்காக இந்திய ஆடவருக்கு அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 3) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பிலிப் மேத்யூ தனது மனைவி மெரின் ஜாயைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக தி சன் சென்டினல் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுக்கவில்லை என்பதோடு, மேல் முறையீடு செய்யப்போவதில்லை என தெரிவித்ததால் பிலிப் மரண தண்டனையிலிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது.
குடும்ப வன்முறை காரணமாக திருமணத்தை முறித்துக்கொள்ள முடிவுசெய்த மெரின் ஜாயை 2020ஆம் ஆண்டு அமெரிக்கா, புளோரிடா மாநிலத்தில் ப்ரோவர்ட் ஹெல்த் கோரல் ஸ்பிரிங்ஸ் மருத்துவமனையில் அவரது கணவர் கொலை செய்தார்.
காவல்துறையின் கூற்றுப்படி, பிலிப் மேத்யூ தாதியாகப் பணிபுரிந்த தனது 26 வயது மனைவியை மருத்துவமனையின் கார்நிறுத்துமிடத்தில் வழிமறித்து, அவரை 17 முறை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் கீழே ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த அவரது உடல் மீது காரை ஏற்றி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. மரணமடைவதற்கு முன்னர் மெரின் ஜாய் கொலையாளியின் அடையாளத்தைத் தெரியப்படுத்தியதாக காவல்துறை கூறியது. அவரது சக ஊழியர்களில் ஒருவர், “அவர் ஒரு வேகத்தடை போல” பிலிப் அவர் மீது காரை ஓட்டிச் சென்றதாக விவரித்தார்.
ஜாயின் சக நண்பர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். இறப்பதற்கு முன் “எனது பிள்ளையை காப்பாற்றுங்கள்” எனக் கூறி ஜாய் கதறி அழுததாகக் கூறப்படுகிறது.