தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மியன்மாரில் மத்திய மாகாணநகரத்தைக் கைப்பற்றிய கிளர்ச்சிப் படை

2 mins read
928b989d-91ee-49f6-88ad-6981223ef953
மியன்மார் எல்லையில் சீனாவுடன் இணைக்கும் பல முக்கிய சாலைகளை மியன்மார் தேசிய ஜனநாயகக் கூட்டணி ராணுவம் மூடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. - கோப்புப் படம்: இபிஏ

மியன்மாரில் மத்திய மாகாணத்தில் உள்ள ஒரு நகரை கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றிவிட்டதாக நிழல் அரசாங்கமும் உள்ளூர் ஊடகங்களும் செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்தன.

இதை ஒரு முக்கிய வெற்றியாக தேசிய ஒற்றுமை நிழல் அரசாங்கம் கொண்டாடி வருகிறது.

இருந்தாலும் காவ்லின் நகரை தக்கவைத்துக் கொள்வதில் கிளர்ச்சிப் படையினர் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

காவ்லின் நகரில் ஏறக்குறைய 25,000 பேர் வசித்து வருகின்றனர்.

மியன்மாரின் ராணுவ அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பழங்குடி சிறுபான்மை ராணுவமும் அதற்கு எதிராக புதிய தாக்குதல்களை தொடங்கியிருக்கிறது.

2021ஆம் ஆண்டில் ஜனநாயக அரசாங்கத்தை கவிழ்த்த அந்நாட்டின் ராணுவத் தளபதி ஆட்சியைக் கைப்பற்றி ஆட்சிக் கட்டிலில் வீராப்புடன் அமர்ந்துள்ளார்.

இந்த நிலையில் காவ்லின் நகரில் ராணுவத்துக்கும் எதிர்க்கட்சி துருப்புக்கும் இடையே கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது. திங்கட்கிழமை அன்று கிளர்ச்சிப் படையின் கை ஓங்கியது. பின்னர் அந்நகரம் கிளர்ச்சிப் படையின் வசமானது என்று நிழல் அரசாங்கம் குறிப்பிட்டது.

அதன் தற்காப்பு அமைச்சு, காவ்லின் நகரில் நிழல் அரசாங்கத்தின் கொடியேற்றும் காணொளியை சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தது.

“மாவட்ட அளவிலான ஒரு நகரம் எங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது,” என்று நிழல் அரசாங்கத்தின் பிரதமர் மன் வின் காலிங் தான் ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்தார்.

“என்ன ஒரு மகத்தான வெற்றி,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து ராணுவ அரசாங்கம் பதில் அளிக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் கூறியது.

“மூர்க்கமான சண்டைக்குப் பிறகு சிறிய எண்ணிக்கையிலான ராணுவ வீரர்கள் சரண் அடைந்ததைத் தொடர்ந்து காவ்லின் நகரம் வீழ்ந்தது,” என்று உள்ளூர் கிளர்ச்சிப் படை வீரர் ஒருவரை மேற்கோள்காட்டி உள்ளூர் ஊடகம் ‘மியன்மார் நவ்’ தெரிவித்தது.

ஆனால் காவ்லின் நகரை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கிளர்ச்சிப் படை வைத்திருப்பது சிரமம் என்று மியன்மாரில் உள்ள லாப நோக்கற்ற அனைத்துலக ‘கிரைசிஸ் குரூப்’ என்ற அமைப்பின் மூத்த ஆலோசகரான ரிச்சர்ட் ஹோர்சே தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்