காஸா/ ஜெருசலம்: இதுவரை இஸ்ரேல் காஸாவில் நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அடுத்தகட்டமாக காஸா நகரின் நிலத்துக்கடியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கங்களில் மறைந்திருப்பதாகக் கருதப்படும் ஹமாஸ் போராளிகளை இஸ்ரேல் தற்போது குறிவைக்கிறது.
கடந்த அக்டோபர் 7 அன்று எல்லையைக் கடந்து 1,400 பேர்களை கொன்றதுடன் 240 பிணைக்கைதிகளை கடத்திச் சென்றுள்ள ஹமாஸ் போராளிகளை எதிர்த்து இஸ்ரேல் காஸாவை கடுமையாகத் தாக்கிவருகிறது. வான்வழியாகவும் தரைப்படைகளுடனும் தாக்குதல் நடத்தி காஸாவை இரண்டாகப் பிளந்துள்ளது இஸ்ரேல்.
காஸா நகரை சுற்றிவளைத்து மையப்பகுதியை அடைந்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. முன்னேறி வரும் இஸ்ரேலின் படைகளுக்குப் பெருஞ்சேதம் விளைவித்துவிட்டதாக ஹமாஸ் கூறுகிறது.
காஸாவின் அடியில் ஹமாஸ் அமைத்துள்ள 100 கி.மீ.க்கும் அதிக நீளமான சுரங்கங்களை வெடிபொருட்கள் வைத்து தகர்த்துவருவதாக இஸ்ரேலிய ராணுவ அதிகாரி ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். ஹமாஸ் அமைப்பின் தளபதிகள், அதன் உள் கட்டமைப்பு, பதுங்கு குழிகள், தொடர்புச் சாதன அறைகள் ஆகியவற்றை முற்றாக அழிப்பதே இஸ்ரேலின் ஒரே குறி என்று அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் யோஆவ் காலன்ட் கூறினார்.
சுரங்க வழிப்பாதைகளில் இருந்தபடி நடத்தப்படும் திடீர் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் இஸ்ரேலின் கவச வாகனங்கள் போராடுவதாக ஹமாஸ் மற்றும் மற்றொரு போராளி அமைப்பான இஸ்லாமிய ஜிஹாத் கூறுகின்றன. போர் பற்றி இக்குழுக்கள் கூறுவதை உறுதிசெய்ய முடியவில்லை.
சுரங்கங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் பிணைக்கைதிகளுக்கு ராணுவ நடவடிக்கைகள் ஆபத்தை விளைவிக்கும் என்ற பயம் இருப்பினும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை அவர்கள் விடுவிக்கப்பட்டால்தான் சாத்தியம் என்று இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. காஸா தாக்கப்படும் வரையில் போர் தொடரும் என்று ஹமாஸ் மிரட்டுகிறது.
பொதுமக்களைக் கொல்வதைத் தவிர வேறு எந்த வெற்றியையும் இஸ்ரேல் சாதிக்கவில்லை என்று ஹமாஸ் அதிகாரி காஸி அஹமது, அல் ஜசீரா தொலைக்காட்சியில் கூறினார். தொண்டையில் சிக்கிய முள்போன்று இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இந்தப் போர் அமைந்துள்ளது. எனவே காஸாவை வெல்ல முடியாது என்று அந்த அதிகாரி சூளுரைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
தெற்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த அக்.7 முதல் நடந்துவரும் தாக்குதலில் 10,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மாண்டுவிட்டதாகவும் அவர்களில் 40 விழுக்காடு குழந்தைகள் என்றும் ஹமாஸ் ஆட்சி செய்யும் காஸாவின் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
போர் நிறுத்தம் ஹமாஸ் போராளிகளுக்கு சாதகமாகும் என்பதை அறிந்திருப்பினும் கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்.7) அன்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யாகு போரை இடைநிறுத்தம் செய்யும்படி வலியுறுத்தியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.
ஹமாஸ் போராளிகள் செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வை நோக்கி எறிபடைகளை ஏவியதாகக் கூறினர். அதன்படி இஸ்ரேலிய நகரங்களில் போர் அபாயச் சங்குகள் ஒலித்தன.
காஸாவில் ஹமாஸ் ஆட்சியில் இல்லாமல் இருப்பதை இலக்காகக் கொண்டுள்ள இஸ்ரேல், போர் முடிவுக்கு வந்ததும் அங்கு காலவரம்பின்றி பாதுகாப்புக்கு பொறுப்பேற்கப்போவதாக பிரதமர் நெட்டன்யாகு கூறினார். ஆனால் போர் முடிந்ததும் காஸாவை இஸ்ரேல் அல்லது ஹமாஸ் இருவரும் ஆளப்போவதில்லை என்று இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் காலண்ட் கூறியுள்ளார்.
ஒரு மாதம் முழுவதும் நடந்துள்ள கடும் போரின் காரணமாக வாழ்வாதாரம் காஸாவில் மிகவும் மோசமடைந்துள்ளது. சுமார் 2.3 மி. மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாகிவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளிலும் தற்காலிகக் கூடாரங்களிலும் கார் நிறுத்தங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையே உலக சுகாதார நிறுவனம், காஸாவில் 122,000 பேர் இடம்பெயர்ந்து தேவாலயங்களிலும், பொது கட்டடங்களிலும் மருத்துவமனைகளிலும், மேலும் 827,000 பேர் பள்ளிகளிலும் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அல் ஷிஃபா மருத்துவமனைக்குக் கீழ் சுரங்கங்களையும் போராளிகள் பதுங்குக் குழிகளையும் செயல்நடவடிக்கை மையத்தையும் ஹமாஸ் அமைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. இதனை ஹமாஸ் மறுத்துள்ளது. அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் நிர்வாகக் குழு, அல் ஷிஃபா மருத்துவமனைக்கு மருத்துவப் பொருட்களுடன் சென்ற அதன் வாகனங்கள் செவ்வாய்க்கிழமையன்று (நவம்.7) காஸா நகரில் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறியது. தாக்கியது யார் என்று அடையாளம் காட்டப்படவில்லை.
இதற்கிடையில், பாலஸ்தீனத்தை முன்வைத்தே இஸ்ரேலுடன் உறவு என்று சவூதி அரேபிய முதலீட்டு அமைச்சர் காலிட் அல் ஃபாலே கூறியுள்ளார். இஸ்ரேலுடனான உறவு வழக்க நிலையை எட்டுவதற்கு பாலஸ்தீனத்தின் அமைதி முக்கிய அம்சம் என்றார் அவர்.
கடந்த மாதம் தொடங்கிய போர் இருநாட்டு உறவை அமைத்துக்கொள்ளத் தடங்கலாக அமைந்துவிட்டது. பாலஸ்தீனத்தை மையமாகக் கொண்டுதான் மத்திய கிழக்கில் உள்ள நாடுகளிடம் இஸ்ரேல் அமைதிக்கான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே சவூதி அரேபியா வலியுறுத்திவரும் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூரில் நடந்த புளூம்பர்க் ஊடகத்தின் புதிய பொருளாதார மன்றத்தின் நேரடிப் பேட்டியில் அமைச்சர் இவ்வாறு பேசியுள்ளார்.
எண்ணெய் விலையை வைத்து போர்நிறுத்தத்தை கோருவதைவிடுத்து பேச்சுவார்த்தை மூலமே சவூதி அரேபியா அமைதியை நிலைநாட்ட முயன்றுவருகிறது என்றார் அவர். இவ்வாண்டின் புதிய பொருளாதார மன்றத்தின் மாநாடு இத்தகைய போர் சூழலில் நடப்பது வருத்தமளிக்கிறது என்றும் அவர் சொன்னார். மனிதாபிமான அடிப்படையில் இஸ்ரேலிலும் காஸாவிலும் நிகழ்ந்த இழப்புகள் சவூதி அரேபியாவுக்கு மிகுந்த சோகத்தைத் தந்துள்ளது என்றார் அமைச்சர்.
மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் அமைதியை ஏற்படுத்தும் இலக்குடன் வரும் நாட்களில் அரேபிய, ஆப்ரிக்க, இஸ்லாமிய நாடுகளுடன் தனிப்பட்ட மூன்று மாநாடுகளை தனது தலைமையில் சவூதி அரேபியா ஏற்பாடு செய்யவுள்ளது.