ஜார்ஜ் டவுன்: பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமிக்கு உயர் நீதிமன்றம் அபராதம் விதித்ததை அடுத்து, அவருக்காகத் தொடங்கப்பட்ட நிதித் திரட்டு இயக்கம் வழி அந்த அபராதத் தொகையை எட்ட முடிந்தது.
சமய போதகர் ஸாகிர் நாயக்கை அவதூறாகப் பேசியதன் தொடர்பில் இழப்பீட்டுத் தொகையாக ராமசாமி 1.52 மில்லியன் ரிங்கிட்டை வழங்க வேண்டும் என்று கடந்த வாரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த இலக்கை அடைந்துவிட்டதாக டாக்டர் ராமசாமி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
பணம் ஏழு நாள்களில் திரட்டப்பட்டதாகவும் அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
சமூகத்தின் வெவ்வேறு பிரிவினர் திரண்டுவந்து நிதியளித்ததை அவர் பெருமுயற்சி என்று கூறியிருந்தார்.
“தீபாவளிக்கு எனக்குக் கிடைத்திருக்கும் மிகச் சிறந்த பரிசு இது என்பதில் சந்தேகமே இல்லை,” என்று குறிப்பிட்ட அவர், நிதி அளிப்பதை நிறுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.