முன்னாள் மலேசிய அமைச்சருக்கு ஏழு ஆண்டுச் சிறை

2 mins read
72310afc-3698-492f-839a-7de863e936b1
திரு சயத் சாதிக்குக்கு (நடுவில்) சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியாலின் முவார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இளையர், விளையாட்டுத் துறை அமைச்சருமான சயத் சாதிக் அப்துல் ரகுமானுக்கு ஏழு ஆண்டுச் சிறைத் தண்டனையும் இரண்டு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

சயத் சாதிக்குக்கு 10 மில்லியன் ரிங்கிட் (2.9 மில்லியன் வெள்ளி) அபராதமும் விதிக்கப்பட்டது. நிதிக் களவாடல், கள்ளப் பணத்தை நல்லப் பணமாக்கியது உள்ளிட்டவற்றின் தொடர்பில் அவர்மீது சுமத்தப்பட்டிருந்த எல்லா குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டன.

மார்ச் மாதம் 14ஆம் தேதியன்று திரு சயத் சாதிக்கின் தற்காப்புத் தரப்பு அதன் வாதத்தை முடித்துக்கொண்டது. அவரையும் மூன்று சாட்சியங்களையும் விசாரித்த பிறகு வாதம் நிறைவடைந்தது.

அந்த மூன்று சாட்சியங்களில் ஒருவர், திரு சயத் சாதிக் முன்பிருந்த பர்சாத்து கட்சியின் இளையர் பிரிவான அர்மாடாவின் தகவல் பிரிவுத் தலைவர் உல்யா அக்கமா ஹுசாமுதீன் என்பவர் ஆவார். திரு சயத் சாதிக்கின் முன்னாள் சிறப்பு அதிகாரி முகம்மது அம்‌ஷார் அஸிஸ், அவரின் முன்னாள் தனிப்பட்ட உதவியாளர் சிட்டி நுருல் ஹிடாயா ஆகியோர் மீதமுள்ள இரண்டு சாட்சியங்கள்.

2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று தொடங்கிய நீதிமன்ற விசாரணையில் மொத்தம் 30 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டனர். திரு சயத் சாதிக்கின் தந்தை சயத் அப்துல் ரகுமான் அப்துல்லா அசாகோஃப், தாய் ‌ஷாரிஃபா மஹானி சயத் அப்துல் அஸிஸ், அர்மாடாவின் முன்னாள் துணை காசாளர் ராஃபிக் ஹக்கிம் ரஸாலி உள்ளிட்டோர் அந்த சாட்சியங்களில் அடங்குவர்.

அரசாங்கத் துணை வழக்கறிஞர்களான வான் ‌ஷஹாருதீன் வான் லாடின், முகம்மது அஃபிஃப் அலி ஆகியோர் இந்த வழக்கை நடத்தினர். வழக்கறிஞர்கள் கோபிந்த் சிங் டியோ, ஹய்ஜான் ஒமார் இருவரும் திரு சயத் சாதிக்கைப் பிரதிநிதித்தனர்.

குறிப்புச் சொற்கள்