தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் சொந்த நாடு இல்லாத பிள்ளைகள் குடியுரிமையை இழக்கக்கூடும்

2 mins read
e9bc12e5-b31f-43b1-bbbf-2ff2500f6e98
புதிய சட்டத் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மலேசிய ஆர்வலர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவில் குடியுரிமை சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் அரசாங்கம் பரிந்துரைத்துள்ள அந்த திருத்தங்கள் மோசமானவை என்று சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சட்டத் திருத்தங்களால் பிள்ளைகள் உள்ளிட்ட பலர் குடியுரிமை இல்லாமல் போகக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளதே அதற்குக் காரணம்.

வெளிநாட்டவரை மணமுடித்த பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக மலேசியக் குடியுரிமை வழங்குவது மாற்றங்களில் அடங்கும். வெளிநாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இது பொருந்தும்.

எனினும், வேறு சில குடியுரிமைச் சட்டத் திருத்தங்கள் சில தரப்பினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அந்தத் திருத்தங்களால் சிலர் தங்கள் குடியுரிமையை இழக்க நேரிடும் என்ற அச்சம் நிலவுகிறது.

உதாரணமாக, சில சட்டத் திருத்தங்களின்கீழ் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும் பிள்ளைகளுக்கும் உடனடியாக குடியுரிமை வழங்கப்படாது. இது, பின்னோக்கிச் செல்லும் நடவடிக்கையாகும் என்று சில தரப்பினர் கூறுகின்றனர்.

“இவை கொடூரமான சட்டத் திருத்தங்கள். சொந்த நாடு இல்லாதோர் குடியுரிமை பெறுவதற்கான உரிமைகள் பறிக்கப்படும். நாம் ஏன் பிள்ளைகளைத் தண்டிக்கிறோம்?” என்று லாயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி எனும் அரசாங்க சார்பற்ற அமைப்பின் இயக்குநரான ஸாயிட் மாலிக் செவ்வாய்க்கிழமையன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

லாயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி, ஃபேமிலி ஃபிரன்டியர்ஸ், யாயாசான் சாவ் கிட் உள்ளிட்ட அரசாங்க சார்பற்ற அமைப்புகள் செவ்வாய்க்கிழமையன்று ஒன்றுகூடி சட்டத் திருத்தங்களைச் சாடின. அவை, சட்டத் திருத்தங்களை மறுபரிசீலனைச் செய்யக் கோரி அமைச்சரவை, மாநில ஆட்சியாளர்கள் குழு ஆகியவற்றிடம் இணக்கக் குறிப்பைச் சமர்ப்பிக்கப்போவதாகத் தெரிவித்தன.

ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்படும் இந்த மாற்றங்களுக்கு ஆதரவு தரப்போவதில்லை என்று கூறியுள்ளனர். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கினராவது ஆதரவு தெரிவித்தால் மட்டுமே சட்டத் திருத்தங்களை நடைமுறைப்படுத்த முடியும்.

குறிப்புச் சொற்கள்