கோலாலம்பூர், ஜகார்த்தா, வாஷிங்டன்: காஸாவில் நீடிக்கும் மோதலில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா அசைக்க முடியாத ஆதரவை அளித்து வருகிறது. இதனால் தென்கிழக்கு ஆசியாவில் குறிப்பாக அதன் முஸ்லிம் மக்களிடையே அமெரிக்காவுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வு வலுத்துவருகிறது.
இவ்வட்டாரத்தில் உள்ள அரசாங்கங்களுக்கு, குறிப்பாக மலேசியா, இந்தோனீசியா போன்ற முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட நாடுகளில் அமெரிக்காவுடனான நெருக்கமான உறவுக்கு எடுக்கப்படும் முயற்சிகளை குறைப்பதற்கு அழுத்தம் கொடுக்கப்படுமா என்ற கேள்விகளை இவ்விவகாரம் எழுப்பியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இவ்வட்டாரத்தில் உள்ள நாடுகள் சீனாவுடனான உறவை மேம்படுத்தி வருகின்றன. அதே சமயத்தில் ஆசிய அதிகார மையத்தின் செல்வாக்கை சமநிலைப்படுத்த அமெரிக்காவுடனும் உறவை வலுப்படுத்த அவை விரும்புகின்றன.
இருந்தாலும், நமது வட்டாரத்தில் அமெரிக்கா எப்போதும் சந்தேகமின்றி வரவேற்கப்படும் சக்தியாக இருந்ததில்லை என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் மானுடவியல், கலை மற்றும் சமூக அறிவியல் பிரிவின் தலைவர் ஜோசப் லியோவ் தெரிவித்தார்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன என்று கூறிய அவர், 2001ல் அமெரிக்கா மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான அமெரிக்காவின் போரை சுட்டிக்காட்டினார்.
பல மலேசியர், இந்தோனீசியர் மனதில் இன்னமும் மறக்க முடியாத விவகாரமாக இவை பதிந்துள்ளன. இதனால் இந்த விவகாரங்கள் மீண்டும் சூடுபிடிக்கலாம். அப்போது இத்தகைய நாடுகளின் தலைவர்களுக்கு சிரமங்களை உருவாக்கும் என்று நவம்பர் 1ஆம் தேதி ஆற்றிய விரிவுரையில் அவர் தெரிவித்தார்.
மலேசியாவில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் பொறுப்பு ஏற்ற முதல் ஆண்டிலேயே மலாய் முஸ்லிம் பெரும்பான்மையினரிடம் இழந்துவரும் ஆதரவை திரும்பப் பெறுவதற்காகக் கடுமையாகப் போராடி வருகிறார்.
அதற்காக காஸா பூசலில் அவர் உரக்கக் குரல் எழுப்பி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
“அமெரிக்காவின் துருப்புகள் மத்திய கிழக்கு முழுவதும் உள்ளன. இஸ்ரேலுக்கு இவை எளிதாக பாதையை அமைத்துக் கொடுக்கின்றன. இது, மக்களைக் கொல்லும் பைத்தியக்கரத்தனமான நிலையை எட்டியுள்ளது. மேலும் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சக்கட்டம் இது,” என்று பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அக்டோபர் 24ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற பேரணியில் அன்வார் கூறியிருந்தார்.
ஜகார்த்தாவும் கோலாலம்பூரைப் போல பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக நிற்கிறது. பாலஸ்தீன வட்டாரங்களில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பே இதற்கு மூலக் காரணம் என்பதை இந்தோனீசியா சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஆனால் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் அது குறைவான தொணியிலேயே பேசியிருக்கிறது.
இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ, ஐக்கிய நாடுகளின் அளவுகோலின்படி ஒரு தீர்மானத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையே இஸ்ரேல்-காஸா மோதல் இரண்டாவது மாதத்திற்குள் நுழைந்துள்ளது.
பாலஸ்தீனர்களின் தரப்பில் 10,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். இதுவரை குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றங்கள் எதுவும் நடப்புக்கு வரவில்லை.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அக்டோபர் 7ஆம் தேதி திடீர் தாக்குதல் நடத்தியதில் 1,400 இஸ்ரேலியர்கள் மாண்டனர். இருநூறுக்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை ஹமாஸ் பிடித்து வைத்துள்ளது.