வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூர்யார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உலகின் முதல் முழு கண் மாற்று அறுவை சிகிச்சையை செய்து சாதித்துள்ளனர் மருத்துவர்கள்.
நோயாளிக்கு முழுமையாகப் பார்வை கிடைக்குமா என்பதில் சந்தேகம் இருந்தாலும் மருத்துவ வரலாற்றில் இது ஒரு முக்கியமான மைல் கல் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7,200 வால்ட் உயர் மின்னழுத்தம் கொண்ட கம்பி ஆரோன் ஜேம்ஸ் என்ற 46 வயது ஆடவர் முகத்தில் உரசியது.
அதில் ஜேம்ஸின் இடது கண் முழுமையாக பார்வை இழந்தது. மூக்கு, உதடு, முன் பற்கள், இடது கன்னம், தாடை என முகத்தின் பெரும்பாலான பகுதி சேதமடைந்தது.
அதன் பின்னர் அவரின் முகத்தை சரி செய்ய லேன்கோன் ஹெல்த் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் முழு கண் மாற்று அறுவை சிகிச்சை எலிகளுக்கு சோதனை முயற்சியில் செய்யப்பட்டதாகவும் அதில் எலிகளுக்கு ஓரளவு தான் கண் பார்வை தெரிந்ததாகவும் மருத்துவர்கள் கூறினர்.
முதல்முறையாக உயிரோடு இருக்கும் மனிதனுக்கு முழு கண் மாற்று அறுவை சிகிச்சை செய்தது எதிர்கால மருத்துவத்தின் மீது நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அறுவை சிகிச்சை செய்து முடிக்க கிட்டத்தட்ட 21 மணி நேரம் எடுத்ததாக அறுவை சிகிச்சையை வழிநடத்திய மருத்துவர் எடுவார்டோ ராட்ரிகஸ் தெரிவித்தார்.
தற்போது ஜேம்ஸ் நன்றாகத் தேறி வருவதாகவும், அவரின் கண் பார்வை எப்படி உள்ளது என்பது இன்னும் சில நாள்களில் தெரியவரும் என்றும் எடுவார்டோ ராட்ரிகஸ் கூறினார்.

