பெய்ஜிங்: தன் கைப்பேசிச் செயலியிலும் சில விமானப் பயணச்சீட்டு முன்பதிவுத் தளங்களிலும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டபோது விற்பனையான பயணச்சீட்டுகளை தான் ஏற்றுக்கொள்வதாக சைனா சவுதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை இரவு இரண்டு மணி நேரம் நீடித்த அந்தக் கோளாற்றின்போது US$1.30க்குக் கூட (S$1.80) சில பயணச்சீட்டுகள் விற்கப்பட்டன.
சீனாவின் தென்மேற்கு நகரான செங்டுவுக்கும் அங்கிருந்து புறப்படும் பல விமானச் சேவைகளுக்கான பயணச்சீட்டுகள் சைனா சவுதர்ன் ஏர்லைன்சின் செயலியில் 10, 20 அல்லது 30 யுவானுக்கு (S$1.87 முதல் S$5.60 வரை) விற்கப்பட்டதாக புதன்கிழமை இரவு 8 மணியளவில் பயனீட்டாளர்கள் பலரும் சமூக ஊடகத்தில் பதிவிட்டனர்.
செங்டுவில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்குச் செல்வதற்கான பயணச்சீட்டின் விலை வெறும் 10 யுவான் என்று இணையத்தில் வலம் வந்த படம் காட்டியது. அந்தப் பயணப் பாதைக்கான வழக்கமான குறைந்தபட்ச விலை 400 முதல் 500 யுவான் வரை இருக்கும்.
இந்த விலைக்கும் மேலாக விமான நிலைய, எரிபொருள் கட்டணமாக பயணிகள் குறைந்தது 110 யுவான் செலுத்த வேண்டியுள்ளது.
குறைந்த விலையில் விற்கப்பட்ட பயணச்சீட்டுகள் குறித்து சைனா சவுதர்ன் கூறுகையில், “வழக்கம்போல பயணிகள் அவற்றைப் பயன்படுத்தலாம்,” என்றது.