தோக்கியோ: ஜப்பானில் கடைத்தொகுதி ஒன்றில் 10,000 யெனுக்குமேல் (S$90) மதிப்பிலான பொருள்களைத் திருடி, ஆடவர் ஒருவரின் கையைக் கடித்ததாகக் கூறப்படும் சிங்கப்பூர் விமானச் சிப்பந்தி ஒருவர் நவம்பர் 6ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அன்றைய தினம் முற்பகல் 11 மணியளவில் பாய் பெய்சுவான், 33, என்பவர் பொருள்களைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று உள்ளூர் காவல் நிலையம் கூறியது.
அங்கிருந்த 51 வயது ஜப்பானிய ஆடவர் ஒருவர், கடையிலிருந்து பாய் வெளியேறுவதைத் தடுக்க முயன்றார். அப்போது அவரது கையை பாய் கடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் அந்த ஆடவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பாய் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்காக பணிபுரிவதாக அறியப்படுகிறது.
“பொருள்களை நான் திருடவில்லை. பின்னர் அவற்றுக்காக கட்டணம் செலுத்த நான் எண்ணம் கொண்டிருந்தேன்,” என்று காவல்துறையிடம் பாய் கூறினார்.
அவரிடம் கண்டறியப்பட்ட ஆறு பொருள்களில் குளியலறை துண்டும் கைப்பைகளும் அடங்கும் என ஜப்பானின் என்டிவி நியூஸ் தெரிவித்தது.
அந்த ஆடவரின் கையைக் கடித்ததற்கான காரணம் குறித்து கேட்டதற்கு, “அவர் என் கழுத்தைப் பிடித்தார். என்னை விடுவிக்கவே அவரது கையை நான் கடித்தேன்,” என்று அதிகாரிகளிடம் பாய் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு, ஜப்பானிய சட்டங்களுக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட சிங்கப்பூரருக்கு தான் தூதரக உதவிபுரிந்து வருவதாகக் கூறியது.

