சிட்னி: மங்கோலியப் பெண் ஒருவரைக் கொன்றதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட மலேசிய காவல்துறை அதிகாரியை ஆஸ்திரேலியா தடுப்புக் காவலிலிருந்து விடுவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் தகவல் அறிந்த அரசாங்கத் தரப்பு நபர் திங்கட்கிழமையன்று இதைத் தெரிவித்தார். அந்த மலேசியரை ஆஸ்திரேலியா கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாகத் தடுப்புக் காவலில் வைத்திருந்தது.
முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்குடன் பணியாற்றிய ஒருவருக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்த 28 வயது அல்டான்டுயா ஷாரபூவை, சிருல் அஷார் உமர், அஸிலா ஹாட்ரி ஆகிய இரு காவல்துறை அதிகாரிகளும் கொன்றது மலேசியாவில் நிரூபிக்கப்பட்டது. தீர்ப்பு அளிக்கப்படுவதற்கு சிறிது காலத்துக்கு முன்பு சிருல் மலேசியாவிலிருந்து தப்பியோடினார்.
அதன் பிறகு அனைத்துலகக் காவல்துறை வெளியிட்ட அறிக்கையின் மூலம் சிருல் பிடிபட்டார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அவர் ஆஸ்திரேலியாவின் குடிநுழைவு தடுப்புக் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.
கால வரம்பின்றி வெளிநாட்டவரைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு எதிராக ஆஸ்திரேலியாவின் உயர் நீதிமன்றம் சில நாள்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து சிருல் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவில் தனது மகனுடன் வசித்து வருவதாக ஞாயிற்றுக்கிழமையன்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.