பிரிட்டன்: உள்துறை அமைச்சர் பதவிநீக்கம்; டேவிட் கேமரன் வெளியுறவு அமைச்சர்

2 mins read
c10b2a6b-a5a7-4297-98bf-8632f3ae58bb
லண்டனில் அக்டோபர் மாதம் 12ஆம் தேதி தமது பிரதமர் அலுவலகத்தில் காவல்துறை வட்டமேசைக் கூட்டத்தில் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், பதவிநீக்கம் செய்யப்பட்ட சுவேலா பிராவர்மேன். - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: முன்னாள் பிரதமர் டேவிட் கேமரன், டெளனிங் ஸ்திரீட்டிலுள்ள பிரதமர் அலுவலகம் நோக்கிச் சென்றதாகக் கூறப்படும் வேளையில், அவர் புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஆகக் கடைசி பிரிட்டிஷ் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் காவல்துறையினர் கையாண்ட விதத்தை தமது உள்துறை அமைச்சர் சுவேலா பிராவர்மேன் குறைகூறியதைத் தொடர்ந்து பிரதமர் ரிஷி சுனக் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

திருவாட்டி பிராவர்மேனின் பதவிநீக்கம் அமைச்சரவையை மாற்றியமைக்கும் விதமாகவும் உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது. அவருக்குப் பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று தெரியவந்துள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கன்சர்வேடிவ் கட்சியினரும் திருவாட்டி பிராவர்மேனை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்திய நிலையில், பிரிட்டிஷ் பிரதமர் தமது உள்துறை அமைச்சர் சுவேலா பிராவர்மேனை பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில், தமது பதவிநீக்கத்தை திருவாட்டி பிராவர்மேன் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் பிரிட்டிஷ் தகவலறிந்த வட்டாரம் ஒன்று கூறுகிறது.

திருவாட்டி பிராவர்மேன் சென்ற வாரம் பிரதமர் ரிஷி சுனக்குக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், போராட்டங்களைக் கையாள்வதில் காவல்துறை இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம் சாட்டினார். இது சனிக்கிழமை பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியதாக எதிர்க்கட்சியான தொழிற் கட்சி கூறியது.

பின்னர், 300,000 பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்கும் விதமாக வலதுசாரியினர் மேற்கொண்ட எதிர்ப் போராட்டத்தில் 140 பேருக்கு மேல் கைதாயினர்.

பிரதமர் திரு சுனக், பெரிய அளவிலான அமைச்சரவை மாற்றத்தை கொண்டுவர உள்ளார் என்று கூறப்படுகிறது. இதில், தமது ஆதரவாளர்கள் பலருக்கு அமைச்சரவையில் இடமளித்து சரிவர பணிபுரியாத சக அமைச்சர்கள் சிலரை அவர் பதவிநீக்கம் செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்