கோலாலம்பூர்: போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் குற்றம் நிரூபணமான 11 பேரின் மரண தண்டனையையும் ஆயுள் தண்டனையையும் 30 ஆண்டு சிறைத் தண்டனைக்குக் குறைத்திட மலேசிய மத்திய நீதிமன்றம் மாற்றம் செய்துள்ளது.
மரண தண்டனை தொடர்பான சட்டதிருத்தங்கள் இவ்வாண்டில் முன்னதாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய நீதிமன்றம் முதல்முதலாக மறுஆய்வு செய்யும் வழக்குகளில் ஏழு மரண தண்டனை கைதிகள் உட்பட இந்த 11 பேரின் தண்டனையும் மாற்றப்பட்டது.
“வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இன்று. மலேசியாவின் குற்றவியல் நீதி அமைப்புமுறையில் மறுசீரமைப்பு நீதிக் கொள்கை எப்போதும் இருக்கிறது என்பதை இது நிரூபித்துள்ளது,” என்று மலேசியாவின் சட்ட அமைச்சர் அஸலினா ஓத்மான் குறிப்பிட்டார்.
இவ்வாறு விதிக்கப்பட்ட தண்டனையை மாற்றுவது தொடர்பில் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்ட சுமார் 1,000 பேர் விண்ணப்பங்கள் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.


