இலங்கை பொருளியல் நெருக்கடிக்கு கோத்தபாய ராஜபக்சேவும் காரணம்: உச்ச நீதிமன்றம்

இலங்கை பொருளியல் நெருக்கடிக்கு கோத்தபாய ராஜபக்சேவும் காரணம்: உச்ச நீதிமன்றம்

2 mins read
b304c6d0-8cc2-4fd6-b176-46b80ffb15a0
2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி, இலங்கையின் அதிபராகப் பதவி வகித்த கோத்தபாய ராஜபக்சே (வலது), தம் சகோதரர் மகிந்த ராஜபக்சேவை நாட்டின் புதிய பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே, அவருடைய சகோதரரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்சே இருவரும், நாட்டின் ஆக மோசமான பொருளியல் நெருக்கடிக்குக் காரணமான சில அரசாங்க அதிகாரிகளில் அடங்குவர் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (நவ. 14) அது அவ்வாறு தீர்ப்பளித்தது.

‘டிஐஎஸ்எல்’ எனும் உரிமைகள் குழு, ராஜபக்சே சகோதரர்கள் உள்ளிட்ட இலங்கையின் முன்னாள் அரசாங்க அதிகாரிகள் 13 பேர் மீது பொருளியல் நெருக்கடிக்குக் காரணமானவர்கள் என்று மனுத் தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இலங்கையின் பொருளியல் நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களும் மற்றவர்களும் காரணம் என்று கூறியது.

“அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள், தவிர்த்த நடவடிக்கைகள், நடத்தை ஆகியவை பொருளியல் நெருக்கடிக்குப் பங்களித்தன,” என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு எந்தத் தண்டனையையும் விதிக்கவில்லை என்று ‘டிஐஎஸ்எல்’ கூறியது.

திரு கோத்தபாய, திரு மகிந்த, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் இருவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரின் பெயர்கள் அந்த மனுவில் இடம்பெற்றிருப்பதாக ‘டிஐஎஸ்எல்’ குறிப்பிட்டது.

“உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, பொதுமக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பில் உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் ஓர் எச்சரிக்கையாக அமையும் என்று நம்புகிறோம்,” என்றார் ‘டிஐஎஸ்எல்’ குழு நிர்வாக இயக்குநர் நடிஷானி பெரேரா.

சென்ற ஆண்டு 7.8 விழுக்காடு சுருங்கிய இலங்கை பொருளியல் நிலைகுலைந்தது. நீண்ட நேர மின்தடை, வீழ்ச்சிகண்ட நாணய மதிப்பு, ஆக அதிக வட்டி விகிதம் என எழுபது ஆண்டு காணாத நிதி நெருக்கடியால் நாடு தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்