காஸா: காஸாவில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனையில் ஹமாசுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரேலிய ராணுவம் புதன்கிழமை அன்று அறிவித்தது.
போராளிக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் சரண் அடைய வேண்டும் என்று அது வலியுறுத்தியது
இஸ்ரேலிய துருப்புகள் புதன்கிழமை காசாவின் மிகப்பெரிய மருத்துவமனைக்குள் நுழைந்து அங்குள்ள அறைகளையும் அடித்தளத்தையும் சோதனை செய்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்தனர்.
ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் உள்ளூர் நேரம் அதிகாலை ஒரு மணி அளவில் ஷிஃபா மருத்துவமனை வளாகத்தை அடுத்த சில நிமிடங்களில் சோதனையிடப் போவதாக முகாமில் உள்ள அதிகாரிகளிடம் இஸ்ரேலிய ராணுவம் கூறியதாக ஹமாஸ் சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
மருத்துவமனை வளாகத்தின் மேற்கு பகுதிகளில் இஸ்ரேலியப் படைகள் சோதனை நடத்தியதாக அல் ஜசீரா தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் காஸா சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் முனிர் அல்-பர்ஷ் கூறியிருந்தார்.
அல் ஷிஃபா மருத்துவமனை உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மைய நாள்களில் அதன் நிலைமை மோசமடைந்து வந்ததால் அனைத்துலக அளவில் கவலையும் அதிகரித்தது.
காஸா மீது இஸ்ரேல் படையெடுத்து ஐந்து வாரமான நிலையில் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் அறைகூவல் விடுத்திருந்தன.
ஆனால் இஸ்ரேல் அதற்கு செவிமடுத்ததாகத் தெரியவில்லை.
இஸ்ரேலிய தற்காப்புப் படை வெளியிட்ட அறிக்கையில் “உளவுத்துறை தகவலின் அடிப்படையில் ஷிஃபா மருத்துவமனையில் குறிப்பிட்ட பகுதியில் ஹமாஸுக்கு எதிராக தற்காப்புப் படைகள் துல்லியமான இலக்குடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன,” என்று தெரிவித்தது.
“தற்காப்புப் படையில் மருத்துவக் குழு, அரபு மொழி பேச்சாளர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சிக்கலான, உணர்வுபூர்வமான சூழ்நிலையை கையாள அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படக் கூடாது என்பதே இதன் நோக்கம்,” என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
காஸாவின் ஆகப்பெரிய அல் ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில் ஹமாசின் தளபத்தியம் செயல்படுவதாகவும் மருத்துவமனை மற்றும் சுரங்கப் பாதைகளை தனது ராணுவ நடவடிக்கைகளுக்காக ஹமாஸ் பயன்படுத்துவதாகவும் பிணைக் கைதிகளை அங்கு பிடித்து வைத்துள்ளதாகவும் இஸ்ரேலியப் படை குற்றம்சாட்டியுள்ளது.
ஹமாஸ் இதனை மறுத்துள்ளது.
ஹமாசின் நடவடிக்கைகளுக்கு மருத்துவமனையும் அதன் வளாகமும் ஒரு மத்திய நிலையமாக செயல்படுகிறது என்று இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளர் லெப்டினென்ட் கர்னல் பீட்டர் லெர்னர் சிஎன்என்னுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
இதற்கிடையே இஸ்ரேல் முடிவை ஆதரிப்பதாக அமெரிக்காவின் உளவுத் துறை அறிவித்துள்ளது.
ஆனால் அமெரிக்காவின் புதன்கிழமை அறிவிப்பு மருத்துவமனை மீது இஸ்ரேல் நடவடிக்கை எடுப்பதற்கு பச்சைக் கொடி காட்டுவதாக இருக்கிறது என்று ஹமாஸ் சாடியுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இஸ்ரேலும் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.