வாஷிங்டன்: அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் கட்சி சார்ந்த மோதல் போக்கை கைவிட்டு தற்காலிக அரசாங்க செலவினத் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதன்மூலம் உக்ரேனுக்கு உதவி வழங்குவது, எல்லைப் பிரச்சினை தொடர்பான கொள்கைகள், அமெரிக்க மத்திய அரசின் திட்டங்களின் செலவினத்தை வெகுவாகக் குறைப்பது போன்றவை குறித்த மோதல் போக்கு தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும், தற்காலிக செலவினத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் அரசுப் பணிகள் முடக்கப்படும் அபாயம் குறைந்துள்ளதாக புளும்பெர்க் செய்தித் தகவல் கூறுகிறது.
சபையின் நாயகர் மைக் ஜான்சனின் திட்டத்தில் எல்லைப் பிரச்சினை குறித்த கொள்கைகளில் மாற்றம் இல்லாததைக் குறிப்பிட்டு சபையின் திரு மைக் ஜான்சனின் குடியரசுக் கட்சியின் சில உறுப்பினர்களிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது.
திரு மைக் ஜான்சனின் திட்டத்துக்கு ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் அவருடைய தற்காலிக செலவினத் திட்டம் சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன. செலவினத் திட்டத்துக்கு ஆதரவாக ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் 209 பேரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் வாக்களித்தனர், எதிராக 93 குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் இரு ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் வாக்களித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

