‘இளையர்கள் அடிமையாகும் வழக்குகளைசமூக ஊடகங்கள் எதிர்நோக்க வேண்டும்’

2 mins read
4884b087-e480-4555-98dc-cd092fa0b74b
பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பயனீட்டாளர்களுக்கு சட்டபூர்வமாக கடமைப்பட்டிருக்கின்றன என்று அமெரிக்க நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ஓக்லாண்ட்: அமெரிக்கா முழுவதும் தங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய சமூக ஊடகங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன.

கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றம், இளையர்களை அடிமையாக்கும் வழக்குகளை சமூக ஊடகங்கள் சந்தித்தே ஆக வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது.

இளையர்களை சட்டவிரோதமாக ஈர்த்து மில்லியன் கணக்கான இளையர்களை அடிமைப்படுத்துகிறது என்றும் இளையர்களின் மனநலம் பாதிக்கப்படுகிறது என்றும் சமூக ஊடகங்களுக்கு எதிராக பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஓக்லாண்டில் உள்ள மாவட்ட நீதிபதி இவோன் கோன்ஸாலெஸ், கூகல், யூடியூப் தளங்களை நடத்தும் ஆல்ஃபாபெட், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் நடத்தும் மெடா பிளாட்ஃபார்ம், டிக்டாக் நடத்தும் பைட்டான்ஸ், ‘ஸ்னாப்சாட்’ நிறுவனமான ஸ்னாப் ஆகியவற்றுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளார்.

பரிகாரம், சேதம், தீர்வு மற்றும் தவறான நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சமூக ஊடகங்கள் மீதான வழக்குகள் கோரிக்கை விடுக்கின்றன.

“சமூக ஊடகங்களின் ஆபத்துகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்றைய தீர்ப்பு குறிப்பிடத்தக்க வெற்றியாகும்,” என்று பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்கள் லெக்ஸி ஹஸாம், பிரவின் வாரன், கிறிஸ் சீகர் ஆகியோரின் கூட்டறிக்கை தெரிவித்தது.

140க்கும் மேற்பட்ட மாவட்ட பள்ளிகள் சமூக ஊடகங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளன.

மேலும் 42 மாநிலங்களும் கொலம்பியா மாவட்டமும் அக்டோபரில் மெடா மீது அதன் சமூக ஊடகங்கள் இளையர்களை அடிமையாக்குவதாக வழக்குப் போட்டுள்ளன.

ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர், இதில் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.

குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

டிக்டாக் பேச்சாளர், தங்களுடைய தளத்தில் வலுவான பாதுகாப்பு அம்சங்கள், பெற்றோர் கட்டுப்பாடுகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்