இந்த நூற்றாண்டின் மத்தியில் வெப்பத்தால் ஏற்படும் மரண எண்ணிக்கை நான்கு மடங்காகும்

2 mins read
d87baf54-001c-48c0-bdbc-a157d0990e30
கடந்த 2022ல் உலகின் வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்ததால், சராசரியாக 86 நாள்கள், மக்கள் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். - படம் ராய்ட்டர்ஸ்

லண்டன்: உலகின் வெப்பநிலை, கடந்த 2022ல் 1.1 டிகிரி செல்சியஸ் கூடியது.

அதன் விளைவாக, சராசரியாக 86 நாள்கள், மக்கள் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.

வெப்பநிலை கூடுவதால், அது சார்ந்த நோய்களினால் பாதிக்கப்பட்டு, மரணங்கள் அதிகரிக்கின்றன என்று அனைத்துலகச் சுகாதார நிபுணர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்.14) தெரிவித்துள்ளனர்.

தொழில்களில் அதிக அளவில் இயந்திரப் பயன்பாடு அறிமுகமாவதற்கு முன்பிருந்த காலத்தின் அளவைவிட உலகின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்தால், இந்த நூற்றாண்டின் மத்தியில், உயர் வெப்பத்தால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை 370 விழுக்காடு அதிகரிக்கக்கூடும் என்று அந்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

1991 முதல் 2000 வரையிலான 10 ஆண்டுகளுடன் ஒப்புநோக்க, கடந்த பத்து ஆண்டுகளில், அதிகரித்த வெப்பநிலையால் பாதிக்கப்பட்டு மாண்டோரில் 47 விழுக்காட்டினர், 65 வயதுக்கும் மேற்பட்டோர் என்றும் வெப்பநிலை உயர்ந்ததால் 490 பில்லியன் மணி நேரத்திற்கு வேலைகள் பாதிக்கப்பட்டன என்றும் லான்செட் மருத்துவ சஞ்சிகை தெரிவிக்கின்றது.

மேலும் வெப்ப அலைகள் தொடர்ந்தால், இந்த நூற்றாண்டின் மத்தியில் 525 மில்லியன் மக்களின் உணவுப் பாதுகாப்பையும் இது பாதிக்கும் என்றும் அந்த சஞ்சிகை கூறியுள்ளது

உலகச் சுகாதார நிறுவனம், ஐக்கிய நாட்டு நிறுவன முகவைகள் உள்ளடக்கிய 52 ஆய்வுக் கழகங்களின் 100 நிபுணர்கள் வெப்பநிலை விளைவிக்கும் சுகாதாரப் பிரச்சினைகளை ஆழமாக விவாதித்து வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் உள்ளன.

அண்மையில் நடந்த மற்றோர் ஆய்வில் ஐரோப்பாவில் 2022ஆம் ஆண்டு கோடையில் ஏற்பட்ட வெப்ப அலைகளால் 61,000 பேர் மாண்டிருக்கலாம் என்று அறியப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்