பறக்கும் விமானத்தில் குதிரை ரகளை

பறக்கும் விமானத்தில் குதிரை ரகளை

2 mins read
c4da2b1e-0f9c-4c49-9e25-045d7234fd95
குதிரையால் சரக்கு விமானம் அவரசமாக தரையிறக்கப்பட்டது. - மாதிரி குதிரை படம்: பிக்ஸாபே
Google News Preferred Icon

நியூயார்க்: பெல்ஜியத்தை நோக்கிப் பறந்து கொண்டிருந்த சரக்கு விமானத்தில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த குதிரை வெளியேறியதால் அந்த விமானம் அவசர அவசரமாக நியூயார்க் நகருக்குத் திருப்பப்பட்டது.

நவம்பர் 9ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில் ஏர் அட்லாண்டா ஐஸ்லாண்டிக் சரக்கு விமானம் அட்லாண்டிக் கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தது.

அப்போது, சரக்குப் பகுதியில் உள்ள கூண்டிலிருந்து குதிரை வெளியேறிவிட்டது.

பாஸ்டனில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளைத் தொடர்புகொண்ட விமானச் சிப்பந்திகள், “குதிரை கூண்டிலிருந்து தப்பிவிட்டது,” என்று கூறி அதிர்ச்சியளித்தனர்.

“நாங்கள் நியூயார்க்குக்குத் திரும்ப வேண்டும். எங்களால் குதிரையை கட்டுப்படுத்த முடியவில்லை,” என்று கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் விமானி தெரிவித்தார்.

கால்நடை மருத்துவர் ஒருவரை தயாராக இருக்கும்படியும் விமானி கேட்டுக் கொண்டார்.

குதிரை உட்பட 15 விலங்குகள் சரக்கு விமானம் மூலம் ஐரோப்பாவின் இறக்குமதி நிலையமான லியகுக்குக் கொண்டு செல்லப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கொந்தளிப்பு தாக்கியதாக நியூயார்க்கின் ஜேஎஃப்கே அனைத்துலக விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.

குதிரை உயர்வான தடுப்பு மீது தாவி குதித்து வெளியேற முயற்சி செய்தது. அப்போது அதன் முன்கால்கள் தடுப்பின் ஒரு பக்கத்திலும் பின்னங்கால்கள் கூண்டுக்குள்ளும் சிக்கிக் கொண்டன. விமானம் தரை இறங்கும் வரை குதிரை அடங்குவதாக இல்லை.

விமானம் தரையிறங்கியதும் மருத்துவர்கள் குதிரைக்கு முதலுதவிகளைச் செய்தனர்.

குதிரைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக ஜேஎஃப்கே விமான நிலையத்தின் விலங்கு ஏற்றுமதி நிறுவனத்தின் தலைவரான ஜான் கியுடிசெல்லி தெரிவித்தார்.

குதிரையின் சராசரி எடை 450 கிலோ. அதை மீண்டும் கூண்டுக்குள் அடைப்பது லேசான காரியமல்ல என்றார் அவர்.

இரண்டாவது முறையாக இத்தகைய சம்பவம் நடந்துள்ளது. இதுபோல ஏற்கெனவே நடந்துள்ளதையும் பார்த்து இருக்கிறேன் என்று கியுடிசெல்லி கூறினார்.

குறிப்புச் சொற்கள்