தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஆம், சீன அதிபர் ஸி சர்வாதிகாரிதான்’

2 mins read
d937b1f5-c046-46e5-9220-dcdb263ce35f
நவம்பர் 15ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் பேச்சு நடத்திய பிறகு நடந்து செல்கின்றனர். - படம்: ஏஎஃப்பி

சீன அதிபர் ஸி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி என்ற கருத்தை தாம் மாற்றிக் கொள்ளவில்லை என்று புதன்கிழமை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இரு தலைவர்களும் பல மாத ஆயத்தப் பணிகளுக்குப் பிறகு நேரடியாகச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

திரு ஸியும் திரு பைடனும் ஏறக்குறைய நான்கு மணி நேரம் பேச்சு நடத்தினர்.

பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பேசினார்.

அப்போது, திரு ஸி ஒரு சர்வாதிகாரி என்ற கருத்தை இன்னமும் வைத்திருக்கிறீர்களா என்று திரு பைடனிடம் கேட்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதத்தில் அதிபர் ஸியை அவ்வாறு திரு ஜோ பைடன் குறிப்பிட்டிருந்தார்.

“அவர் ஒரு சர்வாதிகாரி. அதற்கான அர்த்தம் அவர் ஒரு கம்யூனிச நாட்டை வழிநடத்தும் தலைவர். அது, நம்முடைய அரசாங்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது,” என்று அமெரிக்க அதிபர் விளக்கினார்.

கடந்த மார்ச் மாதம் திரு ஸி மூன்றாவது தவணைக் காலத்திற்கு அதிபர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அந்த மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் ஏறக்குறைய 3,000 உறுப்பினர்கள் அவரை ஒருமனதாக அதிபராகத் தேர்ந்தெடுத்தனர். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.

மா சே துங்குக்குப் பிறகு அதிக சக்தி வாய்ந்த தலைவராக திரு ஸி இருந்து வருகிறார். கொள்கைகளை உருவாக்கி, ராணுவத்தை ஒருங்கிணைத்து ஊடகச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி செல்வாக்குமிக்க தலைவராக அவர் விளங்கி வருகிறார்.

அதிபர் ஜோ பைடனின் கருத்துக்கு உடனடியாக சீனாவிடமிருந்து பதில் இல்லை.

சான் ஃபிரான்ஸிஸ்கோவில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு உச்சநிலை மாநாட்டில் இரு நாட்டின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

இதற்கிடையே நூற்றுக்கணக்கான விமர்சகர்கள், நகரின் மையப் பகுதியில் அணிவகுத்து, ‘சுதந்திர திபெத்’, ‘சுதந்திர ஹாங்காங்’ என்று முழக்கமிட்டனர்.

ஜூன் மாதத்தில் திரு பைடன் இதேபோன்று சர்வாதிகாரி என்று குறிப்பிட்டபோது, ​​சீனா அந்தக் கருத்தை அபத்தமானது மற்றும் ஆத்திரமூட்டுகிறது என்று கூறியது.

குறிப்புச் சொற்கள்