உலக வர்த்தக அமைப்பில் சீர்திருத்தம்: பிரதமர் லீ வலியுறுத்து

உலக வர்த்தக அமைப்பில் சீர்திருத்தம்: பிரதமர் லீ வலியுறுத்து

2 mins read
a73070bf-bec0-4d3a-9f81-a862b01f2e13
ஏபெக் பொருளியல் தலைவர்களின் சந்திப்பையொட்டி நடைபெற்ற கருத்தரங்கில் பிரதமர் லீ சியன் லூங் உரையாற்றினார். - படம்: தொடர்பு தகவல் அமைச்சு

புதிய மின்னிலக்க வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் வர்த்தக விதிமுறைகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தி உள்ளார்.

அதேபோல உலக வர்த்தக அமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுவதும் அவசியம் என்றார் அவர்.

ஏபெக் உச்சநிலைக் கூட்டத்தின் நிறைவுநாளில் திரு லீ உரையாற்றினார். ஏபெக் பொருளியல் ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் ஓய்வுத்தள சந்திப்பில் அவரது உரை இடம்பெற்றது.

‘ஒன்றோடொன்று இணைந்திருத்தல், அனைத்தையும் உள்ளடக்குதல் மற்றும் பொருளியலை மீட்டெடுத்தல்’ என்னும் தலைப்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் திரு லீ பேசினார்.

“நிலையான அனைத்துலகச் சூழலை ஏற்படுத்த விதிகள் அடிப்படையிலான பலதரப்பட்ட முறையே சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளுக்கும் திறந்தநிலை பொருளியலுக்கும் நன்னம்பிக்கையை ஏற்படுத்தும். அதனால்தான் அனைத்துலக பண நிதியம் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தத்தை சிங்கப்பூர் ஆதரிக்கிறது. பொதுவான வளர்ச்சிக்கு இவ்விரு அனைத்துலக அமைப்புகளும் தவிர்க்க முடியாத உத்தரவாதங்கள்,” என்று திரு லீ கூறினார்.

உலக வர்த்தக நிறுவன அமைப்பில் இடம்பெற்று உள்ள 164 நாடுகளின் அமைச்சர்கள் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அபுதாபியில் ஒன்றுகூடத் திட்டமிட்டு உள்ளனர். வர்த்தகப் பூசல்களுக்குத் தீர்வுகாண்பதற்கான உலக வர்த்தக அமைப்பின் திறன்களை மீட்டெடுப்பது குறித்து அந்தக் கூட்டத்தில் அவர்கள் ஆலோசிப்பார்கள்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்துலக நெறிமுறைகளுக்குப் புறம்பாக கட்டணங்கள் விதிக்கப்படுவதைத் தடுப்பது போன்றவையே அந்த அமைப்பின் பூசல் தீர்வு முறை என்றழைக்கப்படுகிறது. உலக வர்த்தக நிறுவனத்தின் மேல்முறையீட்டு மன்றத்துக்குப் புதிய நீதிபதிகள் நியமிக்கப்படுவதைத் தடுக்க முன்னைய டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்ததுமுதல் அந்த முறை சீர்கெட்டுள்ளது. அந்த மன்றத்தின் ஆகக் கடைசி நீதிபதிகளின் பதவிக்காலம் 2020 நவம்பர் 30ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது.

இதனைக் குறிப்பிட்டுப் பேசிய திரு லீ, உலக வர்த்தக அமைப்பின் மேல்முறையீட்டு மன்றம் முடங்கிக் கிடக்கிறது என்றார். எனவே நல்ல நிலையில் இயங்கும் வகையில் அதன் சர்ச்சைத் தீர்வு முறையை மாற்றி அமைப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்