இஸ்ரேல்-ஹமாஸ் உடன்பாடு மறுப்பு; வடக்கு காஸாவில் தீவிர சண்டை

2 mins read
9897c2c1-171b-4b2f-b608-feed5dced161
தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் இஸ்ரேலியக் குண்டுவீச்சில் தகர்க்கப்பட்ட கட்டடத்தில் இருந்து காயமடைந்தோரைத் தூக்கிச்செல்லும் பாலஸ்தீனர்கள். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: வடக்கு காஸாவில் இஸ்ரேலியப் படையினருக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை சண்டை மூண்டது.

முன்னதாக, பிணை பிடிக்கப்பட்டவர்களை விடுவிக்கக் கோரும் உடன்பாடு மறுக்கப்பட்டது.

இந்நிலையில், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் டஸன் கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே தற்காலிக சண்டைநிறுத்தம் தொடர்பில் உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை என்று வெள்ளை மாளிகை பேச்சாளரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும் சனிக்கிழமை தெரிவித்தனர்.

இருதரப்புக்கும் இடையே உடன்பாட்டை எட்டுவதில் அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருவதாக சனிக்கிழமை இரவு அவர் கூறினார். உடன்பாடு இன்னும் எட்டப்படாததை வேறொரு அமெரிக்க அதிகாரியும் உறுதிப்படுத்தினார்.

சனிக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய திரு நெட்டன்யாகு, “பிணை பிடிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பல தவறான தகவல்கள் வலம் வருகின்றன. நான் ஒன்றைத் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். இப்போதைக்கு உடன்பாடு எதுவும் இல்லை. ஆனால், சொல்வதற்கு ஏதாவது இருந்தால், அதுபற்றி உங்களிடம் நாங்கள் நிச்சயம் தெரிவிப்போம்,” என்றார்.

ஐந்து நாள் சண்டைநிறுத்தத்திற்குக் கைமாறாக, காஸாவில் பிணை பிடிக்கப்பட்டுள்ள டஸன் கணக்கான மாதர்களையும் சிறார்களையும் விடுவிப்பது தொடர்பில் இஸ்ரேல்-அமெரிக்கா-ஹமாஸ் தரப்புகளுக்கு இடையே தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டதாக இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்தோரை மேற்கோள்காட்டி வாஷிங்டன் போஸ்ட் நாளேடு சனிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

ஆறு பக்க விவரங்கள் அடங்கிய அந்த உடன்பாட்டின் ஒரு பகுதியாக, அனைத்துத் தரப்புகளும் குறைந்தது ஐந்து நாள்களுக்கு சண்டையை நிறுத்திக்கொள்வர் என்றும் 24 மணி நேரத்துக்கு ஒருமுறை 50 அல்லது அதற்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் சிறு குழுக்களாக விடுவிடுக்கப்படுவர் என்றும் வாஷிங்டன் போஸ்ட் கூறியிருந்தது.

பிணைக் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை அடுத்த சில நாள்களில் தொடங்கக்கூடும் என்று இந்த உடன்பாடு குறித்து விவரம் அறிந்தோர் தரப்பு கூறியது.

வாஷிங்டன் போஸ்ட் செய்தி குறித்து இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகத்தில் இருந்து உடனடியாக கருத்து எதுவும் வெளிவரவில்லை.

குறிப்புச் சொற்கள்