கோத்தாகினபாலு, சாபா: சாபாவின் தலைநகர் கோத்தாகினபாலுவில் இருந்து 200 கீ.மீ. தொலைவில் உள்ள டெலுபிட் வட்டாரத்தில் இருக்கும் ஒரு பள்ளியின் 60 வயது தலைமை ஆசிரியர் திரு ஜரர்ஜ் ஒடோல் வெளியிட்ட காணொளி ஒன்று இணையத்தில் அவருக்குப் பாராட்டைப் பெற்றுத்தந்துள்ளது.
எஸ்கே உலு அனுசான் பள்ளியில் 3 ஆண்டுகளாக தலைமையாசிரியராக பணியாற்றிவரும் அவர் , 2020 முதல் சிறிய 3 மீட்டர் அகலமும் 5 மீட்டர் நீளமும் உள்ள (ஸ்டோர் ரூம்) அறையில் எப்படி வாழ்கிறார் என்பதைப் பற்றி அந்தக் காணொளியில் வெளியிட்டார்.
“நான் இங்கு முதன்முதலில் வந்தபோது, பள்ளியில் பயன்படாத பொருள்களையும் உபகரணங்களையும் வைத்திருந்த பழைய அறையாக இது இருந்தது. கவலைதான், இருந்தாலும் என்ன செய்வது,” என்றார் திரு ஒடோல்.
பள்ளியின் சமையல் அறையையும் கழிவறையையும் அவர் பயன்படுத்திவருகிறார். மாலையில் அனைவரும் பள்ளியைவிட்டுச் சென்றவுடன் அங்குள்ள கிராமத்தில் இருந்த 2 நாய்களையும் துணையாகக் கொண்டு அந்தப் பள்ளியில் அவர் வாழ்க்கை நடத்துகிறார். அந்த நாய்களுக்கு அன்றாடம் அவர் உணவூட்டுகிறார்.

