தைப்பே: தைவான் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னணி வேட்பாளரான வில்லியம் லாய் சிங்-தே தம்முடன் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்துள்ளார்.
தைவானில் வரும் ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் நடைபெறும்.
அதில் துணை அதிபர் வேட்பாளராக அமெரிக்காவுக்கான தைவானின் முன்னாள் தூதர் ஹிசியாவ் பி-கிம், 52, தம்முடன் போட்டியிடுவார் என்று லாய் தெரிவித்தார்.
அதிபர் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் திரு லாய், ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் துணைத் தலைவர் ஆவார்.
ஏறக்குறைய அனைத்துக் கருத்துக் கணிப்பிலும் அவர் முன்னணியில் இருந்து வருகிறார்.
தைவான் தமக்கு உரிமையானது என்று பெய்ஜிங் சொந்தம் கொண்டாடும் நெருக்கடிக்கு இடையே அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.
அவருடன் துணை அதிபர் வேட்பாளராக களமிறக்கப்படும் ஹிசியாவ் பி-கிம், 52, 2020ஆம் ஆண்டிலிருந்து தைவானின் அமெரிக்காவுக்கான தூதராக இருந்துள்ளார்.
“திங்கட்கிழமை மதியம் ஹிசியாவை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்துவேன்,” என்று தமது ஃபேஸ்புக் பதிவில் திரு லாய் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே தூதர் பதவியிலிருந்து அவர் விலகுவதை ஏற்றுக் கொண்டுள்ளதாக தைவானின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
“பி-கிம் ஒரு அருமையான மனிதர் என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன். நமது நாட்டின் திறன்மிக்க அரிய தூதர்,” என்றும் திரு லாய் கூறியுள்ளார்.
1990களிலிருந்து பி-கிம்மைத் தெரியும் என்று கூறியுள்ள யுஎஸ்-தைவான் வர்த்தக மன்றத்தின் தலைவர் ருபெர்ட் ஹம்மோண்ட், அவர் ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதி என்றார்.
பி-கிம், வாஷிங்டனுடன் நல்லுறவை வளர்த்து வந்துள்ளார். இது, திரு லாய் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மிக உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார்.

