பெய்ஜிங்: காஸாவில் உடனடியாக போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என அரேபிய, முஸ்லிம் அமைச்சர்கள் தெரிவித்து உள்ளனர்.
காஸாவில் சண்டைக்கு முடிவுகட்டி அமைதி திரும்பவும் மனிதாபிமான உதவிகள் தொடரவும் வலியுறுத்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள அவர்கள் தங்களது முதல் பயணமாக நவம்பர் 20ஆம் தேதி பெய்ஜிங் சென்று சேர்ந்தனர்.
ஐநா பாதுகாப்பு மன்ற நிரந்தர உறுப்பு நாடுகளைப் பிரதிநிதிக்கும் அதிகாரிகளைச் சந்திக்க அந்த அமைச்சர்கள் திட்மிட்டு உள்ளனர்.
பாலஸ்தீனர்களுக்கு எதிராகவும் தற்காப்பு என்ற பெயரிலும் தான் மேற்கொண்ட நடவடிக்கைகளை இஸ்ரேல் நியாயப்படுத்துவதை ஏற்க வேண்டாம் என அவர்கள் மேற்கத்திய நாடுகளைக் கேட்டுக்கொண்டனர்.
சவூதி அரேபியா, ஜோர்தான், எகிப்து, இந்தோனீசியா, பாலஸ்தீனம் ஆகியவற்றைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்தவர்களும் சீனா சென்றனர். பெய்ஜிங்கில் சீனப் பேராளர் வாங் யியை அவர்கள் சந்தித்தனர்.
இம்மாதம் ரியாத்தில் இஸ்லாமிய-அரேபிய உச்சநிலைக் கூட்டம் நடைபெற்றபோது பாலஸ்தீனப் பிராந்தியத்தில் இஸ்ரேல் புரிந்துவரும் போர்க்குற்றங்கள் மீது விசாரணை நடத்த அனைத்துக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அந்தக் கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.