கேன்பரா: கடலில் ஆஸ்திரேலியக் கடற்படை முக்குளிப்பாளர்கள் இருப்பதாக எச்சரிக்கை விடுத்தும் அதைப் பொருட்படுத்தாது ஒலி அலைகளைச் சீனப் போர்க் கப்பல் எழுப்பியதாகவும் அதன் விளைவாக கடற்படை முக்குளிப்பாளர் ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் ஜப்பானின் தனித்துவப் பொருளியல் மண்டலத்தில் இம்மாதம் 14ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
இதற்கு ஆஸ்திரேலியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் ஆஸ்திரேலியா-சீனா இடையே இருக்கும் உறவைப் பாதித்திருப்பதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் கூறியுள்ளார்.
“சீனப் படையினரின் செயல் மிகவும் ஆபத்தானது, நிபுணத்துவமற்றது,” என்று திரு அல்பானீஸ் சாடினார்.
வடகொரியாவுக்கு எதிரான தடைகளை நிலைநாட்ட அந்தக் கடற்பகுதியில் ஆஸ்திரேலியக் கப்பல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

