நவம்பர் 20ஆம் தேதி, விண்வெளி ஆய்வில் மனிதகுலத்தின் ஒத்துழைப்பைக் குறிக்கும் முக்கிய நாளாகக் கருதப்படுகிறது.
அனைத்துலக விண்வெளி நிலையம் தொடங்கப்பட்ட நாள் இது.
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகியவற்றின் விண்வெளி ஆய்வு நிலையங்கள் ஒன்றுபட்டு விண்வெளி ஆய்வை மேற்கொள்ளும் இந்தப் பொது நிலையம் 1998ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி செயல்படத் தொடங்கியது.
25 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளின் விண்வெளி வீரர்கள் இதில் தங்கி முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
விண்வெளியில் அதிக நாள் தங்குவதால் மனித உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்த முக்கியத் தகவல்களை எதிர்காலச் சந்ததியர்க்கு நாம் விட்டுச்செல்ல இது கைகொடுத்துள்ளது. செவ்வாய்க் கோளை நோக்கிய பயணம் போன்ற நடவடிக்கைகளுக்கும் இந்தத் தகவல்கள் மிக முக்கியம்.
அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குத் தளமாக விளங்கும் இந்த நிலையம், அரசதந்திர உறவுகளோடு பொதுவான இலக்குகளை எட்டுவதற்கான பங்காளித்துவத்தை வலுப்படுத்தவும் வழிவகுத்துள்ளது.
அனைத்துலக விண்வெளி நிலையம்தான் சூரியக் குடும்பத்தில் உள்ள ஆகப் பெரிய செயற்கைப் பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

